திமுக ஆட்சியில் தினம் புதுப்புது ஊழல் - அண்ணாமலை காட்டம்

திமுக ஆட்சிக்காலத்தில் தினம் புதுப்புது ஊழல் முளைப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 1, 2022, 07:09 PM IST
  • ஆவின் பாலின் அளவு குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு
  • அண்ணாமலை கடுமையாக அரசை விமர்சித்துள்ளார்
  • தினம் புது ஊழல் முளைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்
திமுக ஆட்சியில் தினம் புதுப்புது ஊழல் - அண்ணாமலை காட்டம் title=

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தினமும் புதுப்புது ஊழல்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. மக்கள் பணம் புதிய புதிய பரிமாணங்களில் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆவின் நிறுவனத்தில்,பாலின் அளவைக் குறைத்து வழங்கி ஒரு மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருக்கிறது.பல மடங்கு உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தின், அதிக விலை உயர்வு அதிர்ச்சியிலிருந்து மக்களின் மீள்வதற்கு முன்பாக, ஆளும் திமுக அரசு மக்களுக்கு அதற்கு அடுத்த அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது. இதனை அதிர்ச்சி என்று சொல்வதைவிட,மக்களுக்கு எதிரான பகிரங்க மோசடி என்றே சொல்ல வேண்டும். இதையே, ஒரு தனியார் செய்திருந்தால், அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஒரு அரசுத்துறை நிறுவனமே, மக்களுக்கு வழங்கப்படும் பாலில் சுமார் 70 மில்லி அளவை குறைத்து அரை லிட்டர் பால் கவரில் வெறும் 430 மில்லி மட்டுமே தோராயமாக வழங்கிவருகிறது என்ற அதிர்ச்சித் தகவல்  இப்போது ஆதாரத்துடன் வெளியாகியிருக்கிறது. 

வெறும் 70 மில்லி தானே குறைந்தது என்றும், தெரியாமல் நடந்துவிட்டது என்றும் யாரும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் தோராயமாக 35 இலட்சம் லிட்டர் அதாவது சுமார் 70 லட்சம் அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் தினமும் விற்பனையாகின்றன.ஒரு பாக்கெட்டிலேயே சுமார் 70 மில்லி குறைகிறது என்றால் கிட்டத்தட்ட ஒரு கவர் பாலுக்கு (ரூ.3.08) மூன்று ரூபாய் எட்டு காசுகள் குறைய வேண்டும். கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவிற்கு மக்களின் பணம் ஏமாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது தினமும் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் மக்கள் பணம் கொள்ளை போயிருக்கிறது. ஆவின் பால் விற்பனையில், சட்டத்துக்குப் புறம்பாக பெறப்பட்ட இந்தப் பணம் யாருக்குப் போய்ச் சேர்ந்தது?

மேலும் படிக்க | மாட்டிறைச்சி விவகாரம் - இது திராவிட மாடலா இல்லை ஆரிய மாடலா?... சீமான் கேள்வி

ஆவின் பால் 500 மில்லி இருக்கும் என்று நம்பி வாங்கும் மக்களுக்கு, 430 மில்லி மட்டும் கொடுத்துவிட்டு, 70 மில்லி லிட்டர் அளவிற்கு தினமும் பாலின் அளவு குறைத்து வழங்கப்பட்டுள்ளது, என இன்றைய தினமலரில் மிக விரிவான செய்திகள் வெளிவந்துள்ளது. மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த நம்பிக்கை துரோகத்திற்கு பொறுப்பேற்க போவது யார்? வழக்கம்போல அதிகாரிகளின் மீது பழி சூட்டி முதலமைச்சரும், அமைச்சரும் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒரு இயந்திரக் கோளாறினால் அறியாமல் ஏற்பட்ட தவறு என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டால் தவறு நடைபெற்ற முதல் நாளே ஐந்து லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே? தொடர்ந்து தினமும் 5 லட்சம் லிட்டர் பால் மிச்சமாகி இருக்குமே? இந்த அதிகப்படியான பால் எங்கே போனது? 

மேலும் படிக்க | கொல்லிமலை வறீங்களா ? இனி இப்படி பன்னாதீங்க - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

எத்தனை நாட்களாக மக்கள் இதுபோல ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று ஒரு முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் மக்கள் கொடுக்கும் பணத்திற்கு குறைவாக பாலை வழங்கக் காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருக்கும் திமுக ஆட்சியில் விதவிதமான புதிய பாணியில் இதுபோன்ற ஊழல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். மக்களிடம் அதிகமாக பெறப்பட்ட பணத்தை உடனடியாக மக்களுக்கு ஆவின் நிறுவனம் திருப்பித் தர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News