பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது என மைத்ரேயனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!!
ராஜ்யசபா எம்பி பதவியிலிருந்து கடந்த 24-ஆம் தேதி மைத்ரேயன் உள்ளிட்ட 5 பேர் பணி நிறைவு பெற்றனர். அப்போது மைத்ரேயன் இறுதி உரையாற்றிய போது 3 முறை ராஜ்யசபாவுக்கு ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டேன் என கூறினார். இதை பேசும் போதே அவர் மனமுடைந்து அழுதார். இதையடுத்து நேற்று முன் தினம் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவர் கூறுகையில் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் வழங்கப்படவில்லை.
இதனால் மாநிலங்களவையிலாவது வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. இதனால் நான் மனவருத்தம் அடைந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 36 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்; கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார். மேலும் ஆகஸ்ட் 1 முதல் எலக்ட்ரிக் காருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். எலக்ட்ரானிக் கார்களுக்கான பேட்டரி, சார்ஜருக்கு 18% லிருந்து 5% ஆக வரி குறைக்கப்படும்.
மின்சார பேருந்துகளுக்கும் விலக்கு அளிக்கவும் ஒப்புதல் வழங்கியது ஜிஎஸ்டி கவுன்சில். இந்த வரி குறிப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார்.
எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது; நான் அழுதேனா?’ பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது; முந்தைய காலங்களில் எனக்கும் கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் அழுதேனா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். கூட்டணியில் இருந்தாலும் பிஜேபி மற்றும் அதிமுகவிற்கு கொள்கை வேறு. நாங்கள் இரட்டை குழல் போல் மத்திய அரசும், நாங்களும் ஒட்டி இணைந்து இல்லை என்றும், எங்களுக்கு வாயும், வயிறும் வெவ்வேறு எனவும் பதில் அளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ் மொழி குறித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார். அதுமட்டுமின்றி முத்தலாக் உள்ளிட்ட மசோதாவில் அதிமுகவின் நிலைப்பாட்டை மாநிலங்களவையில் வெளிப்படுத்துவோம். நாடாளுமன்றத்தில் ரவீந்தரநாத் பேசியது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
முன்னேறிய சமுதாய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டு விவாகரத்தில், 69 சதவீதம் பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும். மேலும் இந்த விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்பட முடியாது என அவர் கூறினார்.