அதிமுகவில் தற்போது நடந்து வருபவரை தொண்டர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறது. செய்வதறியாது திகைத்து வரும் சூழல் அதிமுகவில் நிலவி வருகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்குவதும், இ.பி.எஸ் ஆதரவாளர்களை ஓ.பி.எஸ் நீக்குவதும் என காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனினும், தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தப்பட்டதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது அதிமுகவே இல்லை, தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும், இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஓ.பி.எஸ் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.
இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் வரிசையாக பலரை எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டு மகன்களையும் நீக்கியுள்ளார்.
ஓ.பி.எஸ்ஸின் மூத்த மகன் ரவீந்திர நாத் எம்.பி அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரைக் கட்சியில் இருந்து இழந்ததன் மூலம் மக்களவையில் அதிமுகவின் பிரதிநித்துவம் தற்போது பூஜ்ஜியமாகியுள்ளது.
மற்றொரு மகனான ஜெயபிரதீப்பையும் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து இ.பி.எஸ் நீக்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், இவர்களது ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், மருது அழகராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 17 பேரும் அதிரடியாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.
இ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடியாக ஓ.பி.எஸ்ஸும் களத்தில் இறங்கியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அந்த அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, வளர்மதி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறி மாறி இருவரும் அதிமுக பிரமுகர்களை நீக்கிக் கொண்டிருப்பதால் கட்சித் தொண்டர்களிடையே உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது மகனை நீக்கியிருப்பது எடப்பாடி பழனிசாமியின் உச்சக்கட்ட சர்வாதிகாரப் போக்கை காட்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், மக்களவையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு இருந்த ரவீந்தரநாத்தை நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை என்றும், முறையாக இந்த அறிவிப்பு செல்லாது என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமர்சனங்களும், துரோகங்களும், சூழ்ச்சிகளும் எதிர்கொள்ளும் போது இரும்பு மனதாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்வதாக தெரிவித்துள்ளார்.
கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று முடிவெடுத்திருப்பதால் அமைதியாக இருப்பதாக தெரிவித்த அவர், காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம் என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ