தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அத்துடன் அவர் முதல்வர் ஆக வேண்டும் என்றும் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறார் சசிகலா. எனவே, சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கு இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்த பேட்டி:-
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளும் அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவுகள் கவலை அளிக்கிறது. இதன் காரணமாக, ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது.
2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காகவோ அல்லது ஜெயலலிதாவின் வீட்டில் உள்ள வேறு யாருக்காகவோ வாக்களிக்கவில்லை.
அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டுள்ளது. திமுக தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்த ஒரு முடிவையும ஜனநாயக விதிகளுக்கு உட்பட்டே திமுக எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.