3 உயிர்கள் பலியாக அரசின் அலட்சியமே காரணம்: கொதித்தெழுந்த சீமான்!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2022, 03:15 PM IST
  • மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி
  • 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்
  • தலா 1 கோடி ரூபாயை நஷ்ட ஈடு - சீமான்
3 உயிர்கள் பலியாக அரசின் அலட்சியமே காரணம்: கொதித்தெழுந்த சீமான்!  title=

மதுரையில் கழிவுநீர்த் தொட்டியை சீரமைக்கும் போது, பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மதுரையில் மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த மூவரில் மதுரை மாடக்குளம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி சரவணனும் ஒருவர் என்ற செய்தி துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

Accident Image

கழிவு நீர்த்தொட்டிகளைச் சுத்தம்செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இருந்தும் அதுகுறித்து ஆளும் அரசுகள் எவ்வித அக்கறையும் செலுத்தாது, அலட்சியம் செய்ததன் விளைவே தற்போது மேலும் மூன்று உயிர்கள் பறிபோக முக்கியக் காரணமாகும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணம் எடுக்கவும், குளிர்பானங்களைப் பெறவும் இயந்திரங்கள் வந்துவிட்ட எனது நாட்டில் மனிதக் கழிவுகளை அள்ளவும், பாதாளச் சாக்கடையைத் தூய்மைப்படுத்தவும், மனிதர்கள் இறங்கி தங்கள் கைகளால் செய்ய வேண்டி இருப்பதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். 

மேலும் படிக்க | மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தமிழகத்தில் தொடரும் அவலம்!

மனிதர் கழிவுகளை மனிதரே அள்ளி மரணிக்கச் செய்துவிட்டு; சந்திரனுக்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும் விண்வெளி ஓடங்களை அனுப்புவதையும், கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் தயாரிப்பதையும் வளர்ச்சி என்று வாய்கூசாமல் பேசுவதை எவ்வாறு ஏற்க முடியும்?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கக் கடந்த 1994 ஆம் ஆண்டு 'தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம்' உருவாக்கப்பட்டதுடன், கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதித்துச் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பொருளாதாரத் தேவைக்காக இப்பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது மிகுந்த வேதனைக்குரிய உண்மையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 50 முதல் 100 பேர் வரையிலும், தமிழ்நாட்டில் 5 முதல் 10 பேர் வரையிலும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியின் போதே உயிரிழந்து வருகின்றனர். ஒவ்வொருமுறையும் கழிவு நீர்த்தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி உயிரிழப்பதும், அரசு நிதியுதவி அளிப்பதோடு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது.

மேலும் படிக்க | சென்னை ஐஐடியை மிரட்டும் கொரோனா: 30 பேருக்கு தொற்று உறுதி! XE வகை?

ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழிப்படைந்து, மனிதக் கழிவுகளை அகற்றவும், பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தீவிரமாகக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டுமெனவும், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன உடைகள் உட்பட அனைத்துப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள பணியமர்த்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தற்போது மதுரை மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தலா 1 கோடி ரூபாயை துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று எழுதியுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News