2016 சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடும்பின்னடைவை சந்தித்தது. இதற்கான காரணத்தை விசாரிக்க தொடங்கியது அ.தி.மு.க தலைமை. தற்போது இந்த இரண்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றம்: திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலராக பதவி வகித்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளராக பதவி வகித்த எம். ஹரிஹர சிவசங்கர் ஆகியோர் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் வி. முத்தையா அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர். முருகையா பாண்டியன் விடுவிக்கப்பட்டு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பி. நாராயண பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம் விடுவிக்கப்பட்டு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஏ. விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.