கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்க முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் COVID-19 தடுப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ.1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிட கோரிக்கை வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 11, 2020, 05:06 PM IST
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்க முதல்வர் கோரிக்கை title=

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேசினார். 21 நாள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-க்கு பிறகு தொடர வேண்டுமா இல்லையா என்பதை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் அரசு ஏப்ரல் 30 வரை நாடு தழுவிய லாக்-டவுனை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைத்தன.

அதேநேரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் காணொளி மூலம் பேசும் போது,  மாநிலத்தில் கொரோனா தொற்று எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் கொரோனா நிலைமையை குறித்து பேசினார். மேலும் தமிழகத்தில் COVID-19 தடுப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ.1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிட கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் ஏற்கனவே தமிழக அரசு சார்பாக பிபிஇ, முகக் கவசங்கள் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை வாங்க ரூ. 3,000 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அந்த தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

ஏற்கனெவே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.510 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

நேற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதில் 19 பேர் கொண்ட குழு, சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கலந்துக்கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு பரிந்துரை செய்தது.

இன்று பிரதமர் உடன் காணொளி மூலமும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பேசினார். இந்தநிலையில், இன்று மாலை செய்தியாளர்களை முதல்வர் சந்திக்க உள்ளார்.

Trending News