ஆவின் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நேரடியாக நேரடியாகத் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடிய நிலையில் திமுக தலைமையில் புதிய அரசு அமைந்ததும் முறைகேடுகளைச் சரிசெய்து ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆவின் நிர்வாக இயக்குநராக கந்தசாமி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.
ஆவின் நிர்வாக இயக்குநராக கந்தசாமி ஐஏஎஸ் பொறுப்பேற்றதும் ஆவினுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த C/F ஏஜென்ட் எனும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் முறையை அதிரடியாக ரத்து செய்ததோடு, முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பினாமிகளாக இருந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட பொதுமேலாளர்கள் சுமார் 34 பேரை ஆவின் வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த 17.07.2021 அன்று பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐஏஎஸ் அதிகாரியின் அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்றதோடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊழல் முறைகேடுகளில் தொடர்புடைய அந்த 34 பொது மேலாளர்களையும் பணியிட மாற்றம் செய்வது மட்டுமே முறைகேடுகளைத் தடுக்க தீர்வாக அமையாது எனவும், அவர்களைப் பணியிட மாற்றம் செய்ததோடு பணியிடை நீக்கம் செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்வாக இயக்குநருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்ட 34 பொது மேலாளர்களில் ஆறு பேரை அதாவது ஜெயக்குமார் (கோவை) காஞ்சிபுரம்-திருவள்ளூருக்கும், இளங்கோவன் (நந்தனம் அலுவலகம்) சிவகங்கைக்கும், ராஜசேகர் (சிவகங்கை) கோயம்புத்தூருக்கும், தங்கமணி (நீலகிரி) புதுக்கோட்டைக்கும், வெங்கடாசலம் (புதுக்கோட்டை) நீலகிரிக்கும், சதீஷ் (தூத்துக்குடி) அம்பத்தூருக்கும் பணியிட மாற்றம் செய்து நேற்று (24.09.2021) நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளதோடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆறு பேரும் அவரவருக்கான பணி மாறுதல் இடத்திற்கு உடனடியாகச் செல்ல வேண்டும் என அந்த ஆறு பேருக்குமான தனித்தனி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்கண்ட பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவு வெளியாகி 24 மணி நேரம் ஆவதற்குள் ஆறு பொது மேலாளர்களுக்குமான பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து அவரவர் பணியாற்றும் ஒன்றியங்களிலேயே பணியாற்றுமாறு நிர்வாக இயக்குநர் 25.09.2021 தேதியிட்ட கடிதம் வாயிலாக உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதோடு 24 மணி நேரத்தில் இரண்டு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள ஆவின் நிர்வாக இயக்குநரின் உத்தரவு நமக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனெனில் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆவின் பொது மேலாளர்கள் 34 பேரும் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன் வேறு எந்த ஒன்றியங்களுக்கும் மாற்றப்பட முடியாது என்கிற நிலையில், ஒருவேளை அவ்வாறு பணியிட மாற்றம் செய்தே ஆகவேண்டும் என்கிற சூழல் இருக்குமானால் அது தொடர்பான கோப்புகள் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முதல்வரின் ஒப்புதல் பெற்ற பிறகே அறிவிப்பு வெளியிட முடியும்.
ஆனால், அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் ஆவின் நிர்வாக இயக்குநரால் ஆறு பொது மேலாளர்களை அவசர அவசரமாகப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடவும், அவ்வாறு உத்தரவிடப்பட்ட அவரது ஆணையை 24 மணி நேரத்திற்குள் அவரே ரத்து செய்யவும் வேண்டிய அவசர அவசியம் என்ன வந்தது? அப்படியானால் ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐஏஎஸ் அதிகாரியை சுயமாய் செயல்படவிடாமல் அவருக்குப் பின்னிருந்து ஏதோ ஒரு சக்தி அழுத்தம் கொடுக்கிறதோ? என்கிற ஐயம் அழுத்தமாக எழுகிறது.
ஏற்கெனவே ஆவினில் ஊழல், முறைகேடுகள் பெருக ராஜேந்திர பாலாஜியின் வலதுகரமாக இருந்த ரமேஷ்குமார், ராஜேஷ்குமார், சிவக்குமார், ராஜசேகர், புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகளை வெறும் பெயரளவில் மட்டும் பணியிட மாற்றம் செய்துவிட்டு அதே அதிகார பலத்துடன் கூடிய பதவியில் வைத்திருந்தால் ஆவினில் எப்படி முறைகேடுகள் தடுக்கப்படும்?
பால் கொள்முதலை விட பால் விற்பனை மிகவும் குறைவாக இருப்பதால் ஆவினில் சுமார் 16 ஆயிரம் டன் பால் பவுடர் மற்றும் 6 ஆயிரம் டன் வெண்ணெய் தேக்கமடைந்துள்ளது. ஒரு கிலோ பால் பவுடர் உற்பத்திக்கு செலவினங்கள் உட்பட 310 ரூபாய்க்கு மேல் அடக்கவிலை ஆன நிலையில் அதில் டன் கணக்கில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு கிலோ பால் பவுடர் 201 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமின்றி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவிருப்பதால் நெய், வெண்ணெய் போன்ற பால் பொருட்களுக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதற்கான தேவை அதிகரிக்கும் சூழலில் தற்போது ஆவினில் தேக்கமடைந்துள்ள சுமார் 6 ஆயிரம் டன் வெண்ணெயில் சுமார் 1600 டன் வெண்ணெயை வடமாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவரின் தனியார் நிறுவனத்திற்கு உற்பத்தி செலவில் இருந்து ஒரு கிலோவிற்கு 150 ரூபாய்க்கு மேல் இழப்பில் கிலோ ஒன்றுக்கு 230 ரூபாய் என்ற அடிமாட்டு விலைக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. (இதுவே வணிக சந்தையில் ஒரு கிலோ வெண்ணெய் 550 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது) பால் பவுடர், வெண்ணெய் விற்பனை மூலம் மட்டும் ஆவினுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
கடந்த கால ஆட்சியில் ஊழல் முறைகேடுகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த ஆவின் நிறுவனம் திமுக ஆட்சியில் சீர்செய்யப்பட்டு இழப்புகள் சரி செய்யப்பட்டு நல்ல நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என நம்பியிருந்த நிலையில் அந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்க மீண்டும் ஆவினில் சதி நடக்கிறதோ என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுகிறது.
எனவே, ஆவின் விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஆவினைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR