தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த 45 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த நாட்களில் குறிப்பிடும் படியாக மழை இல்லை. மேலும் வானத்தில் மேகங்களும் குறைந்துவிட்டன. அதன் காரணமாக வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையானது வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்பட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.