மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்

மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Last Updated : Apr 27, 2020, 09:55 AM IST
மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும் title=

மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப் படும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளன. அவற்றில் முதன்மையானது மதுவை மக்கள் மறந்திருப்பது தான்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 39 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதற்கு பிறகு இன்று வரையிலான  31 ஆண்டுகளில் மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போதெல்லாம், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், மதுவுக்கு அடிமையானவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவர்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறியே மதுக்கடைகளை மூட ஆட்சியாளர்கள் மறுத்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதன்மூலம் கடந்த ஆட்சிக் காலங்களில் கூறப்பட்டவை அனைத்தும் பொய்யான தகவல்கள்; மக்களை ஏமாற்றி மதுவை தடையின்றி விற்பனை செய்ய நடத்தப்பட்ட கபட நாடகம் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 5 வாரங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் மதுவிலிருந்து மீள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானது உண்மை தான் என்றாலும் கூட, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் மீண்டு வந்த அவர்கள், இப்போது புதிய உற்சாகத்துடன் எந்த பணியையும் செய்ய முடிவதாக தெரிவித்துள்ளனர்.  

இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு காலமும் நான் காத்திருந்தேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் மது இல்லாத ஊரடங்கு காலம் புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மது அரக்கனின் ஆதிக்கத்தால் நடந்த குடும்ப வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளன. மற்றொருபுறம் குடும்பத்தை மறந்து குடி, உடல்நலக்கேடு என சீரழிந்து கொண்டிருந்த பலர் ஊரடங்கின் பயனாக மதுவை மறந்து குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமாகும். இதற்கு ஒரே தீர்வு ஊரடங்குக்காக மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டவையாகவே இருப்பது தான்.

மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, மது ஆலைகளை நடத்தும் 10 நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். அதேநேரத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டால் ஒன்றரை கோடி குடும்பங்கள் நிம்மதியாக வாழும். எத்தனை ஆயிரம் கோடியில் எத்தனை திட்டங்களை செயல்படுத்தினாலும் கிடைக்கும் நிம்மதியை விட, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் மக்களுக்கு கிடைக்கும் நிம்மதி மிக, மிக அதிகமாகும்.

இதற்கெல்லாம் மேலாக மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற விழிப்புணர்வு வாசகங்களை மதுக்கடைகளிலும், மதுப்புட்டிகளிலும் எழுதி வைத்து விட்டு மதுவை விற்பனை செய்வது ஏற்கமுடியாத முரண்பாடு ஆகும். இதைக் களைய தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழகத்தின் மதுஒழிப்பு வரலாற்றில் இப்போதைய முதலமைச்சரின் பெயரும் இடம் பெறும்.

தமிழகத்தின் மிகப்பெரிய வலிமை மனிதவளம் தான். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இளைஞர்களும், பணி செய்யக்கூடிய வயதில் உள்ளவர்களும் அதிகம். ஆனால், அதே தமிழகத்தில் தான் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் பணிக்கு சேர்க்கும் அவலநிலையும் நிலவுகிறது. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தமிழக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி பணி செய்ய முடியாமல் முடங்கிக் கிடந்தது ஆகும். மதுவை தற்போது மறந்துள்ள இளைஞர்கள், இனி நிச்சயமாக பணிக்கு செல்வார்கள். தமிழகம் கடந்த காலங்களில் மதுவால் இழந்த மனிதவளம் என்ற மிகப்பெரிய வரம் மீண்டும் கிடைக்கும். இது மதுவால் சீரழிந்த  குடும்பங்களில் நிலவி வந்த வெறுக்கத்தக்க இறுக்கத்தையும், வறுமையையும் நிச்சயமாக போக்கும்.

தமிழ்நாட்டின் மனிதவளம் அதன் முழுத் திறனையும் வெளிப்படுத்தினால் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு குறைந்தபட்சம் 20% உயரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டின்படி, 2020&21 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ. 20 லட்சத்து, 91,896 கோடி ஆகும். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 4 லட்சத்து 18,379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். அதனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. மாறாக ஒட்டுமொத்தமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்; வறுமை விலகும்; குடும்பங்களில் மகிழ்ச்சி தண்டவமாடும். இவை அனைத்தும் சாத்தியமாகும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார். 

Trending News