நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான 2019- 2022 ஆம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் தலைமையான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் சங்க விஷாலும் , நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் நடிகர் விஷால் , நாசர் மற்றும் கார்த்தி நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் இருந்தது.பின்னர் இந்த வழக்கில் நீதிபதி கல்யாணசுந்தரம் அளித்த தீர்ப்பில், நடிகர் சங்க தேர்தல் செல்லாது எனவும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும் நடிகர் சங்க மறு தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நடத்த நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கு இடையில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அந்த மனுவில் ,எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் புதிதாக தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.