ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022... பாஜக அறிக்கை

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2023, 05:36 PM IST
  • பல்வேறு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை சீர்குலைத்து வரும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும்.
  • தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022.
  • திறமை அடிப்படையிலான விளையாட்டுகள் மீது தடை விதிக்க மாநில சட்டமன்றத்திற்கு தகுதி உரிமை இல்லை.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022... பாஜக அறிக்கை title=

தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022 மசோதா குறித்த எங்கள் பார்வை என்பது குறித்து பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஆன்லைனில் நடைபெறும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது.பல்வேறு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை சீர்குலைத்து வரும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. எங்களின் நோக்கம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்ட விதிகளின்படி இன்னும் வலிமை உடையதாக்க வேண்டும் என்பது தானே தவிர அந்த மசோதாவையே தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

மசோதாவில் உள்ள சட்டச் சிக்கல்கள்

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது.

நாளை எதிர்தரப்பினர் இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தால் இந்த மசோதா நிராகரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே நாங்கள் அதில் சில உறுதியான  சட்டரீதியான மாற்றங்களை செய்ய வலியுறுத்துகிறோம். 

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் ஜங்கிலி கேம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைச் செயலாளர் மற்றும் பலர் ஆகியோரிடையே 2021ல் நடந்த SCC ஆன்லைன் மேட் 2762 வழக்கிலே கூறிய தீர்ப்பை, தமிழ்நாடு அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

இணைய வழியில் நடைபெறும் திறமை அடிப்படையிலான விளையாட்டுகள் மீது தடை விதிக்க மாநில சட்டமன்றத்திற்கு தகுதி உரிமை இல்லை என்று நீதிமன்றங்கள் பலமுறை கூறி இருப்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

அந்த தீர்ப்பின் 125, 126, 13 ஆகிய பத்திகள் கொடுக்கும் விளக்கங்கள் இந்த மசோதாவையும் செல்லுபடி ஆகாமல் செய்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இம்மசோதாவை இன்னும் ஆழமாக சிந்தித்து சட்டத்தின் அடிப்படையில் உருவாக்க வேண்டும். 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் அவசரம் ஏதுமின்றி, ஆழமாக சிந்தித்து இம்மசோதாவை கவனமாகத் தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சென்னை நீதிமன்றம் கூறிய இதே கருத்தை கர்நாடக உயர்நீதிமன்றமும் ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் மற்றும் கர்நாடக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் SCC ஆன்லைன் கார் 435/2022 என்ற வழக்கிலே, மாநிலப் பட்டியல் பதிவு வரிசை 34 வரம்புக்குள் வரக்கூடிய விளையாட்டுகளை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதில் திறன் சார்ந்த விளையாட்டுகளை மாநில அரசு சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி இருக்கிறது.

மசோதாவில் உள்ள குறைபாடுகள்

இம் மசோதாவில் விளையாட்டுகளை திறன் மற்றும் வாய்ப்புகள் ஆகிய பிரிவின் அடிப்படையில் ஆராயாமல் “உயர்ந்த திறன்” “சூப்பர் லேட்டிவ் ஸ்கில்” என்ற புதிய தர நிலையை அதற்கான விளக்கங்கள் ஏதும் இன்றி அறிமுகப்படுத்துவதால், இம் மசோதா நீதி மன்றத்தின் விவாத பொருளாகிறது. 

திறன் அல்லது வாய்ப்பு என்ற விளையாட்டின் தன்மையில் எது அதிகம் என்று சந்தேகமின்றி தீர்மானிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.  தடை செய்யப்படும் விளையாட்டை வாய்ப்பு விளையாட்டாக உருவகப்படுத்தினால் மட்டுமே அந்த விளையாட்டை அரசினால் தடை செய்ய முடியும்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் மாயம்!

இந்த சட்ட முன் வடிவம், தமிழ்நாடு கேமிங் சட்டம் 1930ன் தொடர்ச்சியாக இல்லாமல் தன்னிச்சையான அவசர சட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், அதன் சரத்துக்களில் திறன் சார்ந்த மற்றும் வாய்ப்பு விளையாட்டுக்களுக்கும் இடையே ஒரு செயற்கை வேறுபாட்டை உருவாக்குவதாலும் இம்மசோதா சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது

ஆன்லைன் ரம்மி மற்றும் போக்கர் ஆகிய விளையாட்டை திறன் அடிப்படையிலான விளையாட்டாகவும், திறமையின் வெளிப்பாடாகவும் கருதி சென்னை உயர்நீதிமன்றம் ஜங்கிலி கேம்ஸ் வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக இந்த தடைச் சட்ட மசோதா அமைந்துள்ளது. ஆகவே இம் மசோதாவை நீதிமன்றம் ஏற்காது.

திறமை மற்றும் திறன் அடிப்படையிலான விளையாட்டுக்கள் மீது விதிக்கப்படும் எந்த ஒரு தடையும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவான 19.(1).(G) சரத்தை மீறுவதாகும். 

இம்மசோதாவின் வடிவமைப்பு, பல்வேறு உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற முடிவுகளையே எதிர்த்து சட்டத்திற்கு புறம்பாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

மாட்சிமை மிக்க நீதிமன்றங்கள், முன்னர் வழங்கியிருக்கும் தீர்ப்புகளின் வழியே செல்லாமல் தொழில்நுட்பச் சட்டம், பணம் செலுத்துதல் தீர்வு சட்டம், KYC விதிமுறைகள், தொழில்நுட்பச் சான்றிதழ்கள் போன்ற இதர விதிகள் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டிற்குத் தடை விதிக்க முடியாது. 

பல தீர்ப்புகளுடன் ஒத்து நோக்கையில், இந்த திருத்தச் சட்டம் மற்றும் மசோதா சீரற்றதாகவும் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத வகையிலும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே இந்த மசோதாவை இதே நிலையில் மீண்டும் ஆளுனருக்கு அனுப்பாமல், சட்டமன்றத்தின் புனிதம், மற்றும் தமிழ்நாடு அரசின் பெருமைக்கு ஊறு ஏற்படாத வகையில், மீண்டும் நீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத வகையில், சட்ட நுணுக்கங்களை பரிசீலித்த பின்னர் ஆளுனருக்கு அனுப்ப வேண்டும்

மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், கடந்த மார்ச் 21ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையில் பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டப்படி, மாநில அதிகார பட்டியலில் 34ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ளதால், இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியதையே தெரிவித்திருக்கிறார். இதை யாரும் மறுக்கவில்லை. 

ஆனால் இதே சட்டத்தின் சரத்து 34-ன் அடிப்படையில் நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த ஆன்லைன் சூதாட்டச் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த தடைச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் ரம்மி Game of Skill அதாவது திறமை சார்ந்த விளையாட்டு தானே தவிர Game of Chance அதாவது வாய்ப்பு விளையாட்டு அல்ல என்று கூறி கேரள அரசு கொண்டு வந்த தடை சட்டத்தை ரத்து செய்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்திலும் கர்நாடக போலீஸ் சட்டம் 1963 கடந்த 2021 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டது. ஆனால்  கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், கடந்த 2022 பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிமன்றம் அரசு விதித்த தடையை நீக்கி ஆன்லைன் ரம்மியை அனுமதித்தது. 

ஆந்திரா மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தடைச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஒரு வல்லுனர் குழுவை நியமித்து சட்டத்தின் சரத்துக்களை ஆராய உத்தரவிட்டுள்ளது. குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்திலும் கர்நாடக மாநிலத்திலும் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் தடைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

தமிழ்நாடு மாநிலத்தில் 2022 நவம்பர் மாதம் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பாக பல நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தன. தமிழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கப்பில் சிபல், இச்சட்டம் இன்னும் அமலுக்கு வராததால், தமிழ்நாடு அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு எதிராக இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். 

தமிழ்நாட்டின் ஆன்லைன் தடை மசோதாவின் தற்போதைய நிலை

ஆன்லைன் விளையாட்டிற்கான இந்த தடை சட்டத்திற்கு தற்போது மேதகு ஆளுனர் அவர்கள் அனுமதி அளித்தாலும், மீண்டும் இந்தச் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், ஆன்லைன் நிறுவனங்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்படும். அப்போது கேரளா, கர்நாடக, உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த சட்டம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் ஆபத்து உள்ளது.

எங்கள் உறுதியான நிலைப்பாடு

இம் மசோதாவை மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையிலே சட்டப்படி உறுதி செய்தபின்னர். இம்-மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் முன்னெடுக்க வேண்டும் என்றுதான் பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது என்ற பாஜகவின் கருத்தை வலியுறுத்தி பாஜக சட்டமன்ற தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் இன்றைக்கு சட்டமன்றத்தில் பேசினார். இம் மசோதா மீதான விவாதத்தில் பாஜகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும். கலந்து கொண்டனர். எப்போதும் மக்களுக்காக போராடும் பாரதிய ஜனதா கட்சி, ஆன்லைனில் நடைபெறும் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது என்ற எங்கள் நிலைப்பாட்டை இப்போது மக்கள் மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் தேசப் பணியில்

K.அண்ணாமலை

மேலும் படிக்க | மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News