போதைப்பொருள் அதிகம் புழங்கும் மாநிலங்கள்... தமிழ்நாடு லிஸ்டிலேயே இல்லை - முதல்வர் ஸ்டாலின்

TN CM MK Stalin Campaign: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 30, 2024, 11:01 PM IST
  • இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது - முதல்வர்
  • சாதனைகள் சொல்ல வழியில்லை என்று வாய்க்கு வந்ததைப் பேசுகிறார், பிரதமர் - முதல்வர்
  • மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்த போது என்ன செய்தீர்கள் - முதல்வர்
போதைப்பொருள் அதிகம் புழங்கும் மாநிலங்கள்... தமிழ்நாடு லிஸ்டிலேயே இல்லை - முதல்வர் ஸ்டாலின் title=

TN CM MK Stalin Campaign: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களவை தேர்தலை (Lok Sabha Election 2024) முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற திமுக பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்று உரையாற்றினார். அதில், மத்திய பாஜக அரசையும், தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக விமர்சித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் அதில் பேசியிருந்தார். 

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த உரையில், "தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார், பிரதமர் மோடி. அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா? இல்லையே!.

பாஜகவில் இருப்பவர்கள் ரவுடிகள்

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது! அப்போது நீங்கள் எங்குச் சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா? இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே… அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே!. பாஜக ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

மேலும் படிக்க | பாஜகவில் இருந்து விலக அந்த 3 பேர் தான் காரணம்! அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி குற்றச்சாட்டு

என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். ஏனென்றால் நான் தலைவர் கருணாநிதியின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள்! ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பாஜகவில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்.

பிரதமர் பதவிக்கு அழகல்ல...

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பாஜகவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா? உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக அந்தப் புத்தகத்தை வாங்கிச் சரிபார்த்துவிட்டு அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமர் அவர்களே…

அடுத்து, போதைப் பொருட்கள் பற்றியும் பேசியிருக்கிறார். திமுகவில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபர அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை… இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல!

இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது, அங்குதான் அதிகம் பிடிக்கிறார்கள்… ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது?… இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?

மேலும் படிக்க | VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்... அதுவும் 2 தொகுதிகளுக்கும்!

குஜராத்தில் போதைப்பொருள் புழக்கம்...

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது. அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை. மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் ஒன்றிய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது.

அதுமட்டுமில்ல, போதைப்பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட 'டாப் 10' மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. இந்தப் பத்து மாநிலங்களில் 'தமிழ்நாடு' என்ற பெயரே இல்லை! அந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை நமது திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

பிரதமர் மோடி அவர்களே… உங்கள் ஆட்சி அறிக்கையிலேயே இல்லாத தமிழ்நாட்டைப் பற்றி அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே… உங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மேல் அப்படி என்ன கோபம்? இது மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும் - எங்கள் இளைஞர்களையும் ஏன் அவதூறு செய்கிறீர்கள்?

வாய்க்கு வந்ததை பேசும் பிரதமர்

மாண்புமிகு பிரதமர் அவர்களே… உங்களுக்குச் சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன்… போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்?

பிரதமர் என்பது ஒரு உயர்ந்த பதவி! இதுவரைக்கும் எத்தனையோ பிரதமர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்திருக்கிறோம்… அவர்கள் ஆட்சியில் நாட்டிற்குச் செய்ததைச் சொல்வார்கள்… அடுத்து ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்வார்கள்… ஆனால் பிரதமர் மோடி சாதனைகள் சொல்ல வழியில்லை என்று வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்" என பேசினார். 

மேலும் படிக்க | பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த கமல்! ஈரோட்டில் பின்பாயிண்ட் பேச்சு - பாஜக ரியாக்ஷன்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News