TN Schools: அடுத்த மாதம் பள்ளிகள் திறக்குமா? விரைவில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 21, 2021, 01:06 PM IST
  • தமிழகத்தில் ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கின்றது.
  • இன்று முதல் தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பள்ளி மணி ஓசை கேட்க மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
TN Schools: அடுத்த மாதம் பள்ளிகள் திறக்குமா? விரைவில் முக்கிய அறிவிப்பு title=

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளன. 

தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கின்றது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களும் தொற்றின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் பல புதிய தளர்வுகள் (Lockdown Relaxations) அமலுக்கு வருகின்றன. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிக அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று கட்டுக்குள் இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாநிலங்களில் கிட்டதட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்றே கூறலாம். 

தமிழக மாணவர்களின் கல்வி ஆண்டு துவங்கிவிட்டது. தொற்றுக்கு மத்தியில் துவங்கியுள்ள கல்வி ஆண்டில் பாடங்கள் இதுவரை ஆன்லைன் முறையிலேயே நடந்து வருகின்றன. பள்ளிகளும் கல்லூரிகளும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனங்களில் தொடர்ந்து எழும்பி வருகிறது. 

இதற்கிடையில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் (Telangana) ஜூலை 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. தொற்று குறைந்துகொண்டிருக்கும் பிற மாநிலங்களும் இதைத் தொடர வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஜூலை மாதம் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ:  Tamil Nadu Assembly Update: சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிப்பு

எனினும், பள்ளிகளை திறந்தால், மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடும் சூழல் ஏற்படும் என்பதால்,  இதில் அரசு எந்தவித அவசரத்தையும் காட்டப்போவதில்லை. பள்ளிகள் திறப்பதை பற்றி பரிசீலிக்கப்படும்போது, அரசு இந்த முக்கிய அம்சங்களை மனதில் கொள்ளும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன:

- தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் முதலில் பள்ளிகள் திறக்கப்படலாம்.

- மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் துவக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கான நேரடி வகுப்புகள் துவங்கப்படலாம்.

- மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தப்படலாம்.

இதற்கிடையில், தமிழக பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், நேற்று முன்தினம், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சில நாட்களில் பள்ளிகள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி இந்த செயல்முறை விரைவில் நிறைவுபெறும். மேலும், கல்வி தொலைக்காட்சி வீடியோக்களும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. புதிய முறைகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகளை (TN Schools) திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இன்னும் சில நாட்களின் வெளிவரக்கூடும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பள்ளி மணி ஓசை கேட்க மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!! 

ALSO READ: TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News