திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (9-2-2019) காலை, சேலத்தில், கரூர் மாவட்ட அ.ம.மு.க. கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் தி.மு.க-வில் இணைந்தார்!
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்து வருகிறது. இதற்கிடையில் கட்சி தாவல்களும் அடிக்கடி அறங்கேறிவருகிறது.
அந்த வகையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கரூர் மாவட்ட அ.ம.மு.க. கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் தி.மு.க-வில் இணைந்தார். இந்நிகழ்வின் போது கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.
முன்னதாக நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக கழக அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த “ரஜினி மக்கள் மன்றத்தின்” மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.ரஜினிகுமார், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எஸ்.பெரியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப் அணிச் செயலாளர் எம்.கேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இ.ஜெகவீரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.டி.மகேந்திரன், கே.வி.பாஸ்கரன், எஸ். ஜெயராஜ் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் ரஜினி மன்ற நிர்வாகிகள் - அணி நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் “ரஜினி மக்கள் மன்றத்தைச்” சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகிற 23-2-2019 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள “கழகத்தில் இணையும் விழா” நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.