உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன?

Pawan Kalyan vs Udhayanidhi Stalin: சனாதனம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதற்கு, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதனை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 4, 2024, 03:45 PM IST
  • சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கடந்தாண்டு பேசியது கடும் சர்ச்சையாக்கப்பட்டது.
  • அது கடந்த மக்களவை தேர்தல் பரப்புரையிலும் எதிரொலித்தது.
  • பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் உதயநிதிக்கு கடும் கண்டங்களை தெரிவித்தன.
உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன? title=

Pawan Kalyan vs Udhayanidhi Stalin: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று திருப்பதி கோயிலில் பேசியபோது, "சனாதன தர்மத்தை வைரஸ் போன்றது என்றும் அதனை அழிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தலைவர் ஒருவர் பேசியிருந்தார். சனாதன தர்மத்தை வைரஸ், அதனை அழித்துவிடுவோம் என்று சொல்லாதீர்கள். யாரெல்லாம் அப்படி சொல்கிறார்களோ கேட்டுக்கொள்ளுங்கள், சனாதன தர்மத்தை இங்கு இருந்து துடைத்தெறிய முடியாது. அதற்கு யாராவது முயற்சித்தால் அவர்கள்தான் துடைத்தெறியப்படுவார்கள்" என பேசியிருந்தார். 

பவன் கல்யாண் பேசியது குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி, சிரித்துக்கொண்டே "Let's Wait and See, பொறுத்திருந்து பாருங்கள்" என்றும் மட்டும் கூறினார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியபோது, "சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது. அதேபோல் தான் சனாதனமும். அதை எதிர்க்க கூடாது, அதனை ஒழிக்க வேண்டும்" என பேசியிருந்தார். 

மேலும் அந்த மேடையில்,"சனாதானம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதானம் என்ற சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. அதன் அர்த்தம் நிலையானதாகவும் மாற்ற முடியாததாகவும் இருப்பது. ஆனால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கங்கள்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும்..." என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். 

மேலும் படிக்க | ஜெயலலிதா வரிகளை வைத்து தவெக மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

இது பாஜகவினராலும், வலதுசாரிகளாலும் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது, சனாதனத்தை பின்பற்றுபவர்களை அழித்துவிடுவதாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்திருப்பதாக வலதுசாரிகள் விமர்சித்தன. நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் தொடரப்பட்டன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் பிரச்சாரங்களில் பாஜக உதயநிதியின் சனாதன தர்ம கருத்துகளை குறித்து தொடர்ந்து பேசி, இந்தியா கூட்டணிக்கு எதிராக பரப்புரை செய்தது. பெரியளவில் தேர்தல் வெற்றிக்கு சனாதன தர்ம விவகாரம் கைக்கொடுக்கவில்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கூற்றாக இருந்தது. ராமர் கோவில் கட்டுமானம் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எந்தளவிற்கு கைக்கொடுக்கவில்லையோ, அதேபோன்று சனாதன தர்ம விவகாரமும் கைக்கொடுக்கவில்லை என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

அந்த வகையில், சனாதன தர்ம விவகாரம் தேர்தலுக்கு பின்னர் பெரியளவில் பேசப்படாமல் இருந்தது. தற்போது திருப்பதி வெங்கடாசலபதி கோவிவில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை தயாரிக்கப்ப பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக ஆந்திராவின் தற்போதைய சந்திரபாபு நாயுடு அரசு, கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி மீதும், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் கடும் விமர்சனங்களை வைத்தது. தற்போது இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம், ஆந்திரா அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு பதில் புதிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த விவகாரம் சனாதான தர்மத்திற்கு ஏற்பட்ட ஆபத்து என கூறினார். மேலும் இதனால் வந்த தோஷத்தை நீக்க தான் விரதம் இருந்து அதன்பின் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில், நேற்று திருப்பதியில் தரிசனம் மேற்கொண்ட பின்னர் பவன் கல்யாண் பேசியபோதுதான், சனாதன தர்மத்தை அழிக்க நினைத்ததில் அவர் முதல் நபரும் இல்லை, கடைசி நபரும் இல்லை என்றும் யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்களே அழிந்துபோவார்கள் என்றார். அதற்கு திமுக செய்திதொடர்பாளரும் பதிலளித்திருந்தார். 

திமுக செய்தி தொடர்பாளர் சையது ஹபீசுல்லா கூறுகையில்,"திமுக எந்த மதத்தைப் பற்றியோ, குறிப்பாக இந்து மதத்தைப் பற்றியோ பேசவில்லை. ஆனால் சாதிக் கொடுமைகள், தீண்டாமை மற்றும் சாதிப் படிநிலைக்கு எதிராகத் தொடர்ந்து பேசும். மதத்தையும் இந்து கடவுள்களையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் வேறு யாறுமில்லை பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர்தான். அவர்கள்தான் உண்மையான எதிரிகள்... பவன் கல்யாணின் இந்த பேச்சு கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகும்" என்றார். 

மேலும் படிக்க | விஜயதசமி சிறப்பு பேருந்து அறிவிப்பு, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News