TN Latest News Updates: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுநர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். டிஎஸ்பி காயத்ரி போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது, டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது, அங்கு போலீசார் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காளிக்குமார் சரக்கு வாகனத்தில் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே திடீரென காளிக்குமார் ஒட்டி சென்ற சரக்கு வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வழிமறித்தது.
கொலையும், போராட்டமும்
தொடர்ந்து, அந்த கும்பல் காளிக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளிக்குமார் உடல் விருதுநகர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மேலும் படிக்க | ரயிலில் செல்வோர் கவனத்திற்கு... துப்பட்டாக்களை வீசி நகைகள் கொள்ளை!
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்
அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். டிஎஸ்பி காயத்ரியை தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழல் நிலவியது.
போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். போராட்டக்காரர்கள் போலீசாரை மீறி திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இபிஎஸ் கண்டனம்
இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது X பக்கத்தில்,"விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை, போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தொடரும் கனமழை: ஆந்திரா வழியாக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ