மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவோம் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது. தேர்தல் நடந்து முடிந்த 38 தொகுதிகளில் பாஜக-ஆதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருந்தாலும் தமிழகத்தில் பாஜக-வின் கை இன்னும் ஓங்கவில்லை என்பதை இந்த தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது புரிந்ததும், தேர்லுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும் அமமுக தொண்டர்களும் இதைப் புறந்தள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அமமுகவினர் மத்தியில் ஒருவித குழப்பத்தை, சலிப்பை ஏற்படுத்தி, வாக்கு எண்ணும் மையங்களில் தங்களது அதிகார சித்து விளையாட்டுக்களை ஆடலாமா என்ற நப்பாசை தான் இந்த கருத்துக் கணிப்புகளின் பின்னணி என்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று இரு மடங்கு விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.