இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் இந்த மாதம் மார்ச் 15-ம் தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
ஜியோவின் வருகையை தொடர்ந்து பெரும்பாலான மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் அளவுக்கு மீறிய நஷ்டம் காரணமாகவும், கடன் சுமையாலும் தத்தளித்து வந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த சிக்னல் பிரச்சனைக்கு தற்போது ஏர்டெல் நிறுவனம் உதவ முன்வந்திருந்தது. ஏர்டெல்லுக்கு சொந்தமான டவரில் இருந்து தற்காலிகமாக சில ஏர்செல் சிம் கார்டுகளுக்கு மட்டும் டவர் வழங்கப்பட்டு வந்தது .
அதேபோல் நம்பர் மாற்றவும் ஏர்டெல் நிறுவனத்தை அணுகி இருந்தது. நிறைய பேர் நம்பர் மாற்ற விண்ணப்பித்து இருப்பதால், ஏர்டெல்லிடம் உதவி கேட்கப்பட்டு இருந்தது. ஏர்செல்லில் இருந்து மாறவிரும்புபவர்கள் எளிதாக இனி ஏர்டெல்லுக்கு மாற முடியும். இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திவாலான ஏர்செல் நிறுவனத்தை கைப்பற்றுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், ரூ.15,500 கோடி கடன் உள்ளதால் ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றிய 6,000 பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.