Electric Vehicles விலை குறையவுள்ளன: குட் நியூஸ் அளித்த அமைச்சர்

இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கும், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கும் இடையில் உள்ள விலையில் அதிக வித்தியாசம் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2021, 01:05 PM IST
  • பெட்ரோல் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 48%.
  • மின் வாகனங்களுக்கு இது வெறும் 5% மட்டுமே.
  • லித்தியம் பேட்டரிகளின் மொத்தத் தேவையில் 81% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
Electric Vehicles விலை குறையவுள்ளன: குட் நியூஸ் அளித்த அமைச்சர் title=

புதுடெல்லி: நாட்டில் மின்சார வாகனங்களின் ட்ரெண்ட் சூடுபிடித்துள்ளது. எனினும், மின்சார வாகனங்களின் அதிகமான விலை காரணமாக, மக்கள் விரும்பினாலும் மின்சார வாகனங்களை வாங்க மிகவும் யோசிக்க வேண்டியுள்ளது.

தற்போது இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கும், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கும் இடையில் உள்ள விலையில் அதிக வித்தியாசம் உள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில், நாட்டில் இந்த வேறுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியே உறுதி அளித்துள்ளார்.

மின்சார வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதன் காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை மாலை டென்மார்க்கின் தி சஸ்டைனபிலிட்டி அறக்கட்டளை ஏற்பாடு செய்த வெபினாரில் கட்கரி பேசுகையில், மின்சார வாகனங்கள் அதிகரிப்பதால், நாட்டில் மாசுபாடும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

மின்சார வாகனங்களின் (Electric Vehicles) அதிக விலை குறித்த கேள்விக்கு பதிலளித்த கட்கரி, பெட்ரோல் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 48% ஆக இருப்பதாகவும், ஆனால், மின் வாகனங்களுக்கு இது வெறும் 5% மட்டுமே என்றும் கூறினார். லித்தியம் பேட்டரிகளின் விலை அதிகமாக இருப்பதால், மற்ற வாகனங்களை விட மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. ஆனால், விரைவில் நாட்டில் மின்சார வாகனங்களின் விலை குறையும் என்று கட்கரி உறுதியளித்தார்.

மின்சார வாகனங்களின் மையமாக இந்தியா மாறும்

லித்தியம் பேட்டரிகளின் மொத்தத் தேவையில் 81% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்று மத்திய அமைச்சர் கூறினார். அதன் மாற்று குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த திசையில் முன்னேற்றம் காணப்படும் என்றும் அவர் கூறினார்.

‘இந்தியா மின்சார வாகனங்களின் மையமாக மாற வேண்டும் என்பது எனது கனவு. அதனால்தான் மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களை இங்கு தொழிற்சாலைகளை அமைக்க அழைத்துள்ளேன். மேலும், பஜாஜ் மற்றும் ஹீரோ (Hero) போன்ற மாபெரும் இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட 50% மின்சார வாகனங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன’ என்று கட்கரி கூறினார்.

ALSO READ: Cheapest Electric Scooter: ரூ.50,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர்கள் 

சாலையோரங்களில் சார்ஜிங் பாயின்ட்கள் கட்டப்பட்டு வருகின்றன

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட்களின் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார். தற்போது சாலை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் 350 இடங்களில் சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதுதவிர, பெட்ரோல் பம்புகளுக்கு மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் (Charging Points) அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மின்சார வாகன உரிமையாளர்களும் தங்களுடைய சொந்த சார்ஜர்களை வைத்திருக்கிறார்கள் என்று கட்காரி கூறினார். கட்காரி, 'நாட்டில் மின்சார இயக்கம் வேகம் பெற்று வருகிறது' என்றார். இ-வாகனங்கள் மலிவு விலையில் கிடைக்கத் தொடங்கியவுடன், இந்த போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுக்க மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள் என்பது நிச்சயம் என்று கட்கரி கூறினார்.

இது மின்சார வாகனங்களுக்கான 'பிளான் 2030' ஆகும்

நாட்டில் மின்சார வாகன தொழில் வேகமாக வளர்ந்து வருவதாகவும், வரும் நாட்களில் விலை குறைந்தால், அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் நிதின் கட்கரி கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் 30% தனியார் கார்களும், 70% வணிகக் கார்களும், 40% பேருந்துகளும் மின்சார வாகனங்களாக மாற வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்றார்.

இந்த வாகனங்களை இயக்க, சூரிய ஒளி மற்றும் பயோமாஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், இவற்றுக்கு அதிக கார்பன்-உமிழும் நிலக்கரி பயன்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ:Electric Vehicle: பெட்ரோல் கவலை வேண்டாம், பட்ஜெட்டுக்குள் அசத்தலான ஸ்கூட்டர்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News