சனிக்கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய காசினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னை அழித்துக்கொண்டது.
நாசாவால் 1997-ம் ஆண்டு காசினி-ஹியூஜென்ஸ் என்ற விண்கலம் சூரிய குடும்பத்தில் 2_வது மிகப்பெரிய கிரகமான சனிகிரகத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடம் கழித்து சனிகிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் 2004-ம் ஆண்டு நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு காசினி விண்கலம் சனிகிரகத்தை பற்றி ஏராளமான தகவல்களை நமக்கு தந்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு பல்வேறு புகைப்படங்கள், சனி கோள் பற்றி தகவல்களை அனுப்பி வந்தது.
தற்போது தனது 13 ஆண்டு பணியை நிறைவு செய்து ஆயுளை முடித்துக்கொண்டதாக நாசா நேற்று டிவிட்டரில் தெரிவித்தது.
இது தொடர்பாக நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி:-
கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கேஸினி விண்கலம், இதுவரை 4.9 பில்லியன் மைல்கள் பயணித்து, 4 லட்சத்து 53 ஆயிரம் புகைப்படங்களை அனுப்பியுள்ளது. தனது ஆயுளை நேற்று மாலை இந்திய நேரப்படி 5.25 மணியளவில் நிறைவு செய்தது. அப்போது மணிக்கு 1 லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சனி கோள் வளி மண்டலத்தில் மோதி வெடித்து தனது ஆயுளை முடித்துக்கொண்டது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் நாசா தெரிவித்துள்ளது.