Israel Bombarded in Gaza: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கி இன்றுடன் 17வது நாள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் மோதல் முடிவுக்கு வரவில்லை. காசவை அழிக்காமல் ஓய்ய மாட்டோம் என இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதுவும் குறிப்பாக மக்கள் வசிக்கும் இடம், மருத்துவமனை என சர்வதேச போர் விதிகளை மீறி பாலஸ்தீன் மக்கள் மீது தொடர் குண்டுமழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இதுவரை 4651 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், அதில் 1873 குழந்தைகள் மற்றும் 1023 பெண்களும் அடங்குவர் மற்றும் 14245 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீனம் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம் 365 துருப்புகள் உட்பட 1405 இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் குறிவைக்கும் இஸ்ரேல் இராணுவம்
அல்ஜசீராவின் கூற்றுப்படி, இஸ்ரேல் இராணுவம் ரஃபா மற்றும் ஜபாலியா முகாம்கள் உட்பட 25 இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. ஜபாலியாவில் இருந்து இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இதுவரை இஸ்ரேல் மீது 7400 ராக்கெட்டுகள் வீசப்பட்டு உள்ளது
இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தாக்குதல் குறித்து பேசுகையில், இதுவரை இஸ்ரேல் மீது 7400 ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் இஸ்ரேல் மீது ஒரே நாளில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியது எனக் கூறியுள்ளது.
2 லட்சம் இஸ்ரேல் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக இரண்டு லட்சம் இஸ்ரேலிய குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் காசா மற்றும் லெபனான் எல்லையில் இருந்து வெளியேற்றப்பட்டு இஸ்ரேலில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதில் இதுவரை 700க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என இஸ்ரேல் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தரைவழித் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் இஸ்ரேல்
வான்வழித் தாக்குதல் தொடர்ந்து இஸ்ரேல் இப்போது தரைவழித் தாக்குதலுக்கான ஆயத்தத்தைத் தொடங்கியுள்ளது. காசா பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இஸ்ரேல் ராணுவம் முகாமிட்டுள்ளது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
காசாவில் இதுவரை 19 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்
ஞாயிற்றுக்கிழமை காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ரோஷ்டி சாய்ராஜ் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். 'நியூயார்க் டைம்ஸ்' செய்தியின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இதுவரை காசாவில் மொத்தம் 19 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
ஹிஸ்பொல்லா - இஸ்ரேல் இடையே போர் தொடங்கும் சூழல்
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, அக்டோபர் 22 அன்று, இஸ்ரேலின் தகவல் தொடர்பு கோபுரம் லெபனான் தாக்குதல் மூலம் தாக்கப்பட்டது. அதேநேரம் இஸ்ரேல் இன்று பதிலடி கொடுத்து ஹிஸ்புல்லாவின் 3 நிலைகளை அழித்துள்ளது. இருதரப்பில் இருந்தும் தாக்குதல் தொடர்வதால், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் போர் மூளும் அச்சம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே வேற நாடு வந்தால் சரியாக இருக்காது - அமெரிக்கா
மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்தால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு இடையில் வேறு ஏதேனும் அமைப்பு அல்லது நாடு வந்தால் அது சரியாக இருக்காது. நம்மை பாதுகாத்துக்கொள்ள எங்களுக்கு உரிமை உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் மோதலுக்கு பின்னர், அமெரிக்கா மத்தியதரைக் கடலில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியு உள்ளது. அந்த பகுதிகளுக்கு இரண்டு போர்க்கப்பல்களும் அனுப்பப்பட்டு உள்ளன.
பிரதமர் நெதன்யாகு உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு
இந்த போருக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல்கள் மற்றும் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த சந்திப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரின் சமீபத்திய நிலைமை குறித்து விவாதிக்கலாம் எனக் கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ