Israel Hamas War Updates: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போட் 20வது நாளாக இன்றும் தொடர்கிறது. சர்வதேச போர் விதிகளை காற்றில் பறக்க விட்டு, பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். குறிப்பாக குழந்தைகள் பெண்கள் அதிக அளவில் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இதுவரை 6546 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும், அதில் 2704 குழந்தைகள் மற்றும் 1584 பெண்கள் அடங்குவார்கள். 18000 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீனம் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம் 368 துருப்புகள் உட்பட 1407 இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதல் எங்கள் தோல்வி -பிரதமர் நெதன்யாகு
இதற்கிடையில், அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த தாக்குதலை இஸ்ரேல் தடுக்க தவறியதை முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டார். இதுக்குறித்து நெதன்யாகு கூறுகையில், அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலை தடுத்து நிறுத்தாததற்கு எதிர்காலத்தில் என்னுடன் சேர்ந்து அனைவரும் பதில் சொல்ல வேண்டி இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அக்டோபர் 7 இஸ்ரேல் வரலாற்றில் ஒரு இருண்ட நாள் -நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயிலான போருக்கு மத்தியில் நெதன்யாகு நேற்று (புதன்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதிலோ, இது நமது இருப்புக்கான போராட்டம். இதில் வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம். ஹமாஸை ஒழிக்கவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் காசாவில் விரைவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படும் என்று உறுதியளித்த அவர், அக்டோபர் 7 நமது வரலாற்றில் ஒரு இருண்ட நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் என்ற முறையில், இந்த போரில் நாட்டை வெற்றி பெறச் செய்வது எனது பொறுப்பு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இலக்கை நோக்கி உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இஸ்ரேலுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸை அழித்தொழிக்கும் நோக்கில் தரைவழிப் படையெடுப்புக்குத் தயாராகி வரும் இஸ்ரேல் காசா பகுதி மீது தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா அட்வைஸ் - தரைவழி தாக்குதலை ஒத்திவைத்த இஸ்ரேல்
அதேநேரம், நேற்று (புதன்கிழமை) இரவு டாங்கிகளுடன் வடக்கு காஸாவுக்குள் நுழைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் பல ஹமாஸ் நிலைகளையும் ராக்கெட் ஏவுதளங்களையும் குறிவைத்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். மறுபுறம், ஜெருசலேம் போஸ்டின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று தரைவழி தாக்குதலை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டு உள்ளது.
காசா மீதான தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா -ஈரான்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கூறியுள்ளார். ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா பின்னணியில் இருப்பதாக அவர் கூறினார். காசாவில் நடக்கும் படுகொலை மற்றும் குற்றங்களை அமெரிக்கா வழிநடத்துகிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் பலரது இரத்தத்தால் அமெரிக்காவின் கைகள் படிந்துள்ளன. அமெரிக்கா குற்றவாளிகளின் நட்பு நாடு எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன் Vs இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு -தொலைபேசி உரையாடல்
அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் பைடன் நேற்று (புதன்கிழமை) இரவு பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். காசாவில் இருந்து வெளிநாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் இருவரும் விவாதித்தனர். பணயக்கைதிகளை முதலில் மீட்க இரு தலைவர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும், நீடித்து வரும் போருக்கு மத்தியில் ஒரு நீண்ட அமைதிக்கான வழியை ஏற்படுத்துமாறு நெதன்யாகுவிடம் பைடன் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் 1600 பேர் காணவில்லை
'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, காஸாவில் 1600 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 900 குழந்தைகளும் அடங்குவர். இஸ்ரேலிய குண்டுவீச்சில் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் சில மக்களும் குழந்தைகளும் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
35 மருத்துவமனைகளில் 12 மருத்துவமனைகள் மூடல்
தற்போது காசாவில் உள்ள 35 மருத்துவமனைகளில் 12 மருத்துவமனைகள் வசதிகள் மற்றும் குறிப்பாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளதாக நேற்று (புதன்கிழமை) உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 7 பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்களை விட அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக அங்கு சுமை அதிகரித்து வருகிறது எனவும் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) கவலை தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ