Neet bill: நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது; மசோதா சட்டமாகுமா?

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியம் மசோஒதாவை தாக்கல் செய்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2021, 02:46 PM IST
  • நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது
  • எதிர்கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
  • அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது
 Neet bill: நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது; மசோதா சட்டமாகுமா? title=

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியம் மசோஒதாவை தாக்கல் செய்தார்.

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபை அலுவல்கள் தொடங்கியதுமே, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது

சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்துள்ளேன். நீங்களும் (அதிமுக) இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தீர்கள். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.

மாநிலத்தில், முக்கியமாக கிராமப் பகுதிகளில் வலுவான பொது சுகாதார நலனை உறுதி செய்யவும், மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்காக, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் தேவையை விட்டுவிடவும், மற்றும் நெறிப்படுத்துதல் முறை மூலம் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணாக்கர்களின் சேர்க்கையை வழங்கவும், தேவையான சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் மா.சுபிரமணியம் சட்டசபையில் தெரிவித்தார்.

மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறை, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவக் கல்வி படுப்புகளுக்கான சேர்க்கைகளை, இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் IIIவது பட்டியலில் 25வது உள்ளீட்டில் காணலாம். அதன் அடிப்படையில், மாநில அரசு முறைப்படுத்துவதற்கு அதிகாரம் பெறுகிறது. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தரப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை திமுக அமைத்தது.

Also Read | நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்

நீட் தேர்வு குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட அந்தக் குழு கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பிறகு நீட் தேர்வு பற்றி கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ, மாணவிகள் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையவைக்கிறது என்று கூறியிருந்தார்.  

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும். நீட் தேர்வு பிரச்சனை என்பது இந்தியா முழுவதுக்குமானது என்பதை உணரவேண்டும். எனவே, நீட் தொடர்பான சிக்கல்களை, அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை சட்டரீதியான போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், நீட்தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது  ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Also Read | NEET Exam: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது என்றும், நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது என்றும் நீட் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீட் தேர்வானது, சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினருக்கு ஆதரவாக இருப்பதால், சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களின் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

முதல்வருடன் எடப்பாடி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு. அதில் அங்கம் வகித்தது திமுக என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

ALSO READ | நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News