2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது!!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது.. வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை என்றும், 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அடிப்படையில் நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், தற்போதைய சூழலில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்றார். இந்தநிலையில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரையறை, வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை பொறுத்தவரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையிலுள்ள அட்டவணையின்படியே எவ்வித மாற்றமும் இன்றி தேர்தல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.