புதுடெல்லி: இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ஹாகியா சோபியாவை மீண்டும் ஒரு மசூதியாக மாற்றி தொழுகைக்காக திறக்கப்படுவதாக அறிவித்தார். ஹாகியா சோபியாவை சமய சார்பற்ற அருங்காட்சியமாக மாற்ற 1934 ஆம் ஆண்டு உத்தரவிட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு துருக்கி அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த முடிவு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களிடையே ஆழ்ந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கதீட்ரலாக இருந்த ஹாகியா சோபியா, ஒட்டோமான் பேரரசால் இஸ்தான்புல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 86 ஆண்டுகளாக அருங்காட்சியமாக செயல்பட்டு வந்த ஹாகியா சோபியாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்த இஸ்லாமியர்கள், தீர்ப்பைக் கேட்ட பிறகு "Allah is great! " என்று குதூகலித்தனர்.
Also Read | அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும்: சரத் பவார்
துருக்கி தலைநகர் அங்காராவின் உள்ள நாடாளுமன்றத்தில் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர். துருக்கியில் ஒரு மதக் குழுவினர் போட்ட மனுவை விசாரித்த உயர் நிர்வாக நீதிமன்றம், ஹாகியா சோபியாவை அருங்காட்சியகமாக மாற்றிய 1934ஆம் ஆண்டின் அமைச்சரவை முடிவை ரத்து செய்தது.
இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் ஹாகியா சோபியாவை துருக்கியின் மத விவகார துறையிடம் (Turkey's Religious Affairs Presidency) ஒப்படைக்கும் ஆணையில் துருக்கி அதிபர் எர்டோகன் கையெழுத்திட்டார்.
அதன்பிறகு நாட்டு மக்களுக்கு அதிபர் ஆற்றிய தொலைக்காட்சியில் உரையில், ஹாகியா சோபியா மசூதிக்குள் ஜூலை 24ஆம் தேதியன்று முதல் தொழுகைகள் நடைபெறும் என்றும், இந்த முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"மனிதநேயத்தின் பொதுவான கலாச்சார பாரம்பரியத்தின் தன்மையைப் பாதுகாப்பதன் மூலம், தொழுகை நடத்தும் வ்ழிபாட்டுத் தலமாக ஹாகியா சோபியாவை நாங்கள் மாற்றுகிறோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். "ஹாகியா சோபியா எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பதை தீர்மானிப்பது துருக்கியின் இறையாண்மை உரிமை" என்று துருக்கி அதிபர் தெளிவுபடுத்தினார்.
Also Read | ஒடிசாவின் மகாநதியில் 500 ஆண்டுகள் பழமையான 60 அடி உயரம் கொண்ட கோயில் கண்டுபிடிப்பு
"துருக்கியின் பிற மசூதிகள் அனைத்தையும் போலவே, ஹாகியா சோபியாவின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும், உள்ளூர்வாசிகள் அல்லது வெளிநாட்டினர், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் என அனைவரும் அங்கு வருகை தரலாம்" என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறினார்.
அமெரிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தபோதிலும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தை மீண்டும் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அண்டை நாடான கிரேக்கத்துடனான பதற்றங்களை அதிகரிக்கும்.
துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது கிறித்துவ தேவலயமாக கட்டப்பட்டது ஹாகியா சோபியா. ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பின் போது காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சியுற்றது. அப்போது இந்த தேவாலயத்தை ஓட்டோமான்கள் கைப்பற்றினார்கள்.
கிறித்துவ தேவாலயமாக இருந்த இந்த ஹாகியா சோபியா, 1453ஆம் ஆண்டில் மசூதியாக மாற்றப்பட்டது. 1934 ஆம் ஆண்டில், பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தடைசெய்யப்பட்டு துருக்கியில் மேற்கத்திய கலாசாரம் வந்த பிறகு தேவாலயமாக இருந்து மசூதியாக மாற்றப்பட்ட ஹாகியா சோபியா, சமயச் சார்பற்ற அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது . 1935ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாளில் இருந்து ஹாகியா சோபியா, அயசோஃப்யா அருங்காட்சியகம் (Ayasofya Museum) என அழைக்கப்படுகின்றது.
உலகின் சிறந்த கட்டடங்களுள் ஒன்றாகவும், உலகின் எட்டாவது அதிசயம் என்றும் ஹாகியா சோபியா வர்ணிக்கப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் கிறித்தவ சமயத்தின் போதனைகளை விளக்கும் எண்ணற்ற கலைப் படைப்புகள் இருந்தன. அவற்றை முஸ்லீம் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் அழித்துவிட்டனர், எஞ்சிய கலைப் படைப்புகளின் மீது இஸ்லாமியக் கலை அமைப்புகளை ஏற்படுத்தி முஸ்லீம்களின் தொழுகைக்கான மசூதியாக மாற்றப்பட்டது.