ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது: தலைமைசெயலகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் அறிவித்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகம் பகுதியில் பலத்த பாதுகாப்பு! 

Last Updated : May 8, 2018, 12:07 PM IST
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது: தலைமைசெயலகத்தில் பாதுகாப்பு தீவிரம்!  title=

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கையாக அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கைது செய்திருந்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், தலைமை செயலகம் செல்லும் சாலையில் 6000 போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது. 

முன்னதாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து பேரணியாக தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த மேலும் சிலரை போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதி பரபடப்புடன் காணபடுகிறது. 

கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 135 பேரையும், மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பகுதியில் சென்னைக்கு போராட்டம் நடத்த கிளம்பிய ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Trending News