புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்தாலும், இப்போதும் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், மகாராஷ்டிராவில் (Maharashtra) அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு குறித்து பாஜக தலைவர் அமித் ஷா (Amit Shah), முதல் முறையாக தனது மவுனத்தை கலைத்துள்ளார். அதாவது சிவசேனாவின் (Shiv Sena) சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் பேசிய அமித் ஷா, "தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் முதலமைச்சராக இருப்பார் என்று அனைவரின் முன்பு கூறியிருந்தார். அப்பொழுது யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இப்போது சிவசேனா எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத புதிய கோரிக்கைகளை கொண்டு வந்துள்ளன எனக் கூறியுள்ளார்.
ஆளுநரின் நடவடிக்கையை ஆதரித்து பேசிய அமித் ஷா, ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டு தான் முடிவு எடுத்திருக்கிறார். அவர் அரசியலமைப்பை சிதைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் என்சிபி (NCP) பார்ட்டி காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணிகுள் ஒரு கடிதம் எழுதி, அதில் எங்களால் இன்று இரவு 8:30 மணி வரை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று கூறி, தனது இயலாமையை வெளிப்படுத்தியது.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரும் விவகாரத்தில் எந்தவொரு முடிவும் அவசரத்தில் எடுக்கப்பட வில்லை. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 18 நாட்கள் நேரம் வழங்கப்பட்டது. சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அதன் பிறகு மாநிலத்தில் பெரும்பான்மையை நிருபிக்க அனைத்து கட்சிகளும் ஆளுநர் அழைத்தார். இதனையடுத்து சிவசேனா, காங்கிரஸ் (Congress), என்.சி.பி மற்றும் எங்கள் கட்சி (பாஜக) உட்பட அனைத்து கட்சிகளும் அரசாங்க அமைக்க கோரிக்கை வைத்தோம்.
தற்போது கூட எந்த கட்சியிடம் பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க முறையிடலாம் எனக் கூறினார்.
முன்னதாக கடந்த 12 ஆம் தேதி மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யரி (Bhagat Singh Koshyari) பரிந்துரையை அடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை (The Present Role) அமல் படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் (Ramnath Kovind) ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் உள்ளன. மற்ற இடங்களில் சிறிய கட்சி மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா தேர்தலுக்கு முந்தைய பாஜக - சிவசேனா கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் சிவசேனாவின் 50-50 சூத்திரத்திற்கான கோரிக்கையின் காரணமாக இந்த கூட்டணி இறுதியில் முறிந்தது. அதன் பிறகு சிவசேனா என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணியுடன் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.