உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக புது திட்டம் தீட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், உத்திர பிரதேச மாநிலத்தில் அமேய்தி மற்றும் ரேய்பிரேலி தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ராகுல் மற்றும் சோனியா காந்தி போட்டியிட்ட இரு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இவ்விரு தொகுதிகளும் காங்கிரஸ் கோட்டையாக கருதப்படுகிறது.
ஆனால் இம்முறை இந்த தொகுதிகளையும் சேர்த்து அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது.
கடந்த தேர்தலின் போது அமோய்தி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருத்தி இராணி போட்டியிட்டார். தேர்தலில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற ராகுல், இராணியை தோற்கடித்து பாராளுமன்றம் சென்றார்.
இம்முறையும் இவ்விருவருமே இரு கட்சிகளின் சார்பில் அமோய்தி தொகுதியில் களமிறக்கப்பட உள்ளனர்.
ரேய்பிரேலி தொகுதியை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டார். இம்முறையும் இவரே இத்தொகுதியில் போட்டியிடுகின்றார். இவரை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் சிங் போட்டியிடுகின்றார்.
பாஜக-வின் வெற்றி கனவை நிறைவேற்ற தினேஷ் சிங் பெரிதும் உதவுவார் என பாஜக நம்புகிறது. எதுவாயினும் முடிவை அறிய வரும் மே 23-ஆம் தேதி வரை நாம் காத்திருக்க தான் வேண்டும்...