புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தேர்தல் விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
அதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு தேர்தலில் வாக்குகளைப் பெற பிரசாரத்தின் போது இராணுவ வீரர்களை வைத்து பரப்புரை மேற்கொள்கின்றனர். தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் சமமான கட்டுப்பாடு மற்றும் விதிகள் உள்ளன. ஆனால் அதை பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீறி வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத தேர்தல் கமிஷனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து அடுத்த விசாரணை வரும் வியாழனன்று (மே 2) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.