தேர்தல் ஆதாயத்திற்காக சபரிமலை விவகாரத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் ஆகும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா தெரிவிக்கையில்.,
"சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது ஓட்டு கேட்டால், அது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.
ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்."
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படலாம் என கடந்தாண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை அடுத்து மாநிலத்தில் போராட்டங்கள் வெடிக்க, அரசியல் கட்சிகளும் மறைமுகமாக போராட்டத்தை தூண்டி வந்தனர். சபரிமலை விவகாரம் இன்றளவும் மாநிலத்தில் ஓயாத நிலையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் நாள் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெறும் நாடாளுமன்ற தேர்தல், கேரளாவில் வரும் ஏப்ரல் 23-ஆம் நாள் நடைபெறுகிறது. எதிர்வரும் தேர்தலுக்காக பிரதாண கட்சிகள் பிரச்சாரங்களை துவங்கியுள்ள நிலையில், தற்போது தங்களது பிரச்சாரத்தின் போது சபரிமலை விவகாரத்தினை அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்தக்கூடாது என கேரளா தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.