அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் பலமடங்கு வளர்ச்சியை கண்டுவிடும் என பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரிடம் மோடி தெரிவித்தார்!
பக்ரைன் இளவரசரின் விருந்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தற்போது அங்குள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஒரு இந்திய பிரதமர் பக்ரைனுக்கு வருகை தர நீண்ட நேரம் ஆனது என்பதை நான் உணர்கிறேன். இருப்பினும், பக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற முறையில் அது எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
இன்று இந்துக்களின் புனித பண்டிகைகளுள் ஒன்றான ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. உங்களுக்கும், உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் 'கிருஷ்ணா ஜன்மோத்சவ்' வாழ்த்துக்கள். நான் நாளை ஸ்ரீநாத்ஜி கோவிலுக்குச் சென்று இந்த நாட்டில் அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்வேன். இந்தக் கோவிலின் புனரமைப்பு நாளை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயித்து தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய சந்திரயான் 2 நிலவில் கால்பதிக்க உள்ளதாக மோடி பெருமையுடன் தெரிவித்தார். உலகம் முழுவதுமே இந்தியாவின் விண்வெளித்திட்டங்கள் குறித்து பேசப்படுகிறது என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, இத்தனை சிறிய பட்ஜெட்டில் இத்தனை பெரிய சாதனையை எப்படி நிகழ்த்த முடிகிறது என்று உலகமே வியப்புடன் பார்ப்பதாக கூறினார் .
இது முழுக்க முழுக்க இந்தியர்களின் திறமையாலேயே சாத்தியமாகியிருப்பதாகவும் மோடி கூறினார்.அருண் ஜேட்லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மோடி தனது மிக நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டதாகவும் இதனால் மிகுந்த வலியும் வேதனையும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியைப் போன்ற சுஷ்மாவை இழந்துவிட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.தொடர்ந்து பஹ்ரைன் மன்னர் சல்மான் பின் இசா காலிபாவுடன் மனாமாவில் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா-பஹ்ரைன் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.