இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக தடை விதித்துள்ளது!!
இந்தியாவுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது தொடர்பாக எந்தவொரு ஆலோசனையும் இனி நடத்த மாட்டோம் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் துப்பாக்கி சுடும் போட்டி வீரர்களுக்கு மத்திய அரசு விசா மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இதேபோன்று ஒலிம்பிக்கில் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. அதனையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா அளிக்க மறுப்பு தெரிவித்தது போல் எதிர்காலத்தில் எந்தவொரு சம்பவமும் நடைபெறக் கூடாது என்று மத்திய அரசு உறுதி அளித்தால் மட்டுமே, இந்தியா எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது.
#FLASH International Olympic Committee has suspended all discussions with India on hosting any international event until clear written guarantees are obtained from the Indian government of complying with the Olympic Charter. https://t.co/a9S4uiP5l1
— ANI (@ANI) February 22, 2019
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாகிஸ்தான் வீரர்கள் டெல்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியை ரத்து செய்திருக்கிறோம். 61 நாடுகளை சேர்ந்த 500 தடகள வீர்ர்கள் ஒலிம்பிக் தொடர்பான போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் உள்ளனர். அவர்களது நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பாகிஸ்தான் வீரர்களை பங்கேற்க வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இந்தியாவின் இந்த நடவடிக்கை ஒலிம்பிக்கின் அடிப்படை தத்துவத்திற்கு எதிராக உள்ளது. விளையாட்டு என்றால் எந்தவித அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து நாடுகளின் வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீர்ர்கள் பஷிர், கலில் ஆகியோர் 2020 ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெறும் தகுதிச்சுற்றில் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.