ஜார்க்கண்ட் சட்டமன்ற 3ம் கட்ட தேர்தலில் 62.3 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று நடைபெற்ற 17 தொகுதிகளுக்கான 3ம் கட்ட தேர்தலில் 62.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 12, 2019, 09:07 PM IST
ஜார்க்கண்ட் சட்டமன்ற 3ம் கட்ட தேர்தலில் 62.3 சதவீதம் வாக்குகள் பதிவு title=

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்ட தேர்தலின் வாக்குபதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்று 17 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. 12 இடங்களில் வாக்களிப்பு மாலை 3 மணிக்கு முடிந்தது. மற்ற தொகுதிகளான ராஞ்சி, ஹதியா, காங்கே, ராம்கர் மற்றும் பர்கதா சட்டசபை இடங்களுக்கு மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்தது. மூன்றாம் கட்ட தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் 3 ஆம் கட்டத்தின் 17 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 3 மணி வரை 57.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 17 தொகுதிகளில் 12 தொகுதிகள் மாவோயிஸ்ட்டு அச்சுறுத்தல் மிக்க பதற்றமான தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதனால் போலீசார், துணை ராணுவப் படையினர் உட்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடெர்மா, பர்கதா, பாரி, மண்டு, ஹசாரிபாக், சிமரியா (SC), பார்காகான், ராம்கர், தன்வார், கோமியா, பெர்மா, இச்சாகர், சில்லி, கிஜ்ரி (ST), ராஞ்சி, ஹதியா மற்றும் காங்கே (SC) என 17 தொகுதிக்கு தேர்தல் இன்று நடந்தது. 17 தொகுதிகளில் 26,80,205 பெண்கள் மற்றும் 86 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உட்பட 56,18,267 வாக்காளர்கள் (தங்கள் உரிமையைப் பயன்படுத்த தகுதியுடையவர்கள்) உள்ள 17 தொகுதிகளில் 329 வேட்பாளர்கள் உட்பட 309 வேட்பாளர்களின் தலைவிதி முடிவு செய்யப்பட உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி நடத்தப்பட்டது. பதிவான வாக்குகளுடன் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நான்காம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 16 ஆம் தேதியும், இறுதியாக 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 20 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News