வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் எந்தப் பயனும் இல்லை: பிரசாந்த் கிஷோர்

Lok Sabha Elections: இம்முறை தனது வழக்கமான தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதியில் போட்டியிடாமல், கேரளாவின் வயநாடில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2024, 05:28 PM IST
  • அமேதியில் யார்? குழப்பத்தில் காங்கிரஸ்.
  • மகனுக்கு பின் மாப்பிள்ளையா?
  • இந்தியாவை ஜெயிக்க இங்கே ஜெயிக்க வேண்டியது அவசியம்: பிரசாந்த் கிஷோர்

Trending Photos

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் எந்தப் பயனும் இல்லை: பிரசாந்த் கிஷோர் title=

Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாட்டில் மக்களவைத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. நாடு முழுதும் முழு மூச்சுடன் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. தேர்தல் களம் களைகட்டியுள்ள இந்த நிலையில், பெரிய அரசியல் தலைவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. விமர்சனங்களும் வாழ்த்துகளும் கொடி கட்டி பறக்கின்றன.

கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று. இதை ஒரு விஐபி தொகுதி என்றே கூறலாம். இந்த தொகுதியை எப்போதும் நாடே கவனிப்பது வழக்கம். இதில் இம்முறை காங்கிரஸ்  ( Congress) கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. (BJP) சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் களத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், இம்முறை தனது வழக்கமான தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதியில் போட்டியிடாமல், கேரளாவின் வயநாடில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர். ராகுல் காந்தி 2014ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019 -இல் அவர் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு, அமேதியில் தோல்வியுற்றார்.  

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் எந்தப் பயனும் இல்லை: பிரசாந்த் கிஷோர்

ராகுல் காந்தியின் இந்த முடிவு குறித்து அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனமான பிடிஐ -இடம், 'உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற முடியாவிட்டால், கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும் எந்தப் பயனும் இல்லை. கேரளாவில் மட்டும் வெற்றி பெற்று காங்கிரஸால் இந்தியாவை வெல்ல முடியாது' என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் அமேதியை விட்டுக் கொடுத்தது வாக்காளர்கள் மத்தியில் தவறான செய்தியை அனுப்பி அவநம்பிகையை பரப்பும் என அவர் மேலும் கூறினார்.

இந்தியாவை ஜெயிக்க இங்கே ஜெயிக்க வேண்டியது அவசியம்

2014-ல் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தனது தொகுதியுடன் வாரணாசியிலும் போட்டியிட முடிவெடுத்தார். அதில் ஒரு அரசியல் வியூகத்தை காண முடிந்தது. சில வட மாநிலங்களில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வரை எந்தக் கட்சியாலும் எந்தத் தலைவராலும் மாபெரும் வித்தியாசத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

அமேதியில் யார்? குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் குடும்பத்தின் கோட்டையாக விளங்கும் அமேதியில் யாரை நிற்க வைப்பது என்பதில் இன்னும் காங்கிரஸ் கட்சி குழப்பத்தில்தான் உள்ளது. இந்த நிலையில்தான் பிரஷாந்த் கிஷோரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: பாஜக கூட்டணி 400+ தொகுதிகளை கைப்பற்றுமா..!

மகனுக்கு பின் மாப்பிள்ளையா?

இந்த நிலையில்ம் சமீபத்தில் அமேதி மக்கள், அங்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் தான் தேர்தல் களத்தில் இறங்க முடிவு செய்தால் அது அமேதியில் இருந்துதான் இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் பிரயங்கா காந்தி வத்ராவின் கணவர் ராபர்ட் வத்ரா கூறினார். மேலும் அமேதியின் தற்போதைய எம்.பி ஸ்மிருதி இரானி, தொகுதியை புறக்கணித்து, காந்தி குடும்பத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். 

ராகுல் காந்திக்கு ஒரு பிரேக் அவசியம்: பிரசாந்த் கிஷோர்

2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை என்றால், ராகுல் காந்தி சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அரசியல் வியூகவாதி பிரஷாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ராகுல் காந்தியால் கட்சியின் நிலையை முன்னேற்ற முடியவில்லை என கூறிய பிரஷாந்த் கிஷோர், கட்சியின் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்கவும் அவருக்கு மனம் வரவில்லை என்றும் கூறினார். தற்போது  மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், முடிவுகளை எடுப்பது என்னவோ ராகுல் காந்திதான் என அவர் தெரிவித்தார். 

நாட்டின் மிக பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதைக்கு மீண்டும் கொண்டு வர பிரசாந்த் கிஷோர் ஒரு மறுமலர்ச்சித் திட்டத்தைத் தயாரித்தார் என்பதும், காங்கிரஸ் கட்சியில் சேரவும் அவர் தயாராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் அவர் காங்கிரசில் சேரவில்லை. இந்தியாவின் மிக நேர்த்தியான, சாதுர்யமான, அரசியல் நுணுக்கங்கள் அனைத்தும் கற்றறிந்த ஒரு மிகச்சிறந்த அரசியல் வியூகவாதியாக பிரசாந்த் கிஷோர் பார்க்கபடுகிறார். 

மேலும் படிக்க | Maharashtra: நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்த மகாராஷ்டிரா தொகுதி உடன்பாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News