கட்ட விட மாட்டோம்.! - தமிழ்நாடு ; கட்டியே தீருவோம்! - கர்நாடகா

மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 22, 2022, 01:58 PM IST
  • மீண்டும் பரபரப்பாகும் மேகதாது அணை விவகாரம்
  • அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
  • ‘ஒரு மாநிலத்தின் உரிமையை இன்னொரு மாநிலம் பறிக்ககூடாது’ - கர்நாடகா
கட்ட விட மாட்டோம்.! - தமிழ்நாடு ; கட்டியே தீருவோம்! - கர்நாடகா title=

மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா - தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் நீண்டிய நெடிய வரலாறுகளையும், சர்ச்சைகளையும், நீதிமன்றங்களையும், பேச்சுவார்த்தைகளையும் பார்த்து வரும் பொன்னி என்ற காவிரி விவகாரம் எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இரு மாநில அரசியல் முக்கியத்துவத்தில் ‘காவிரி’ எப்போதும் சர்ச்சைக்குரியவை. தற்போது மேகதாது என்றழைக்கப்படும் இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அதற்கு தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு குட்டி ‘ப்ளாஷ்பேக்’ செல்லவேண்டியிருக்கிறது.!

மைசூர் - சென்னை ஒப்பந்தம்

அது 1807ம் ஆண்டு. அப்போதைய மைசூர் மாகாணத்தின் குடகு மலைச்சரிவில் ஆரவாரமாக கொட்டி ஓடும் இந்த அற்புதமான நதியைத் தேக்கி ஒரு அணை கட்டினால் என்ன ? என்று பிரிட்டன் கர்னல் ஆர்.ஜே.சாங்கி என்பவருக்கு ஒரு யோசனை தோன்றியது. காவிரி தொடர்பான சர்ச்சைகளின் கதையை இந்த இடத்தில் இருந்துதான் வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்குகிறார்கள். கர்னல் ஆர்.ஜே.சாங்கியின் யோசனையை அப்போதைய சென்னை மாகாணம் முதலில் ஒத்துக்கொண்டுவிட்டாலும், பின்னர் சென்னை மாகாணத்துக்கு தண்ணீர் குறைந்துவிடுமே என்று ஓர் அச்சம் ஏற்படுகிறது. பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. இரு மாகாண அரசுகளும் ஒத்துவராததால் காவிரிப் பிரச்சனை இங்கிலாந்து வரை சென்றது. 

Image Of Cauvery River
மேலும் படிக்க | மேகதாது விவகாரம்: அனைத்துக்கட்சிக் குழுவின் டெல்லி பயணம் வெற்றியா? தோல்வியா?

பின்னர் 1892ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி இரு மாகாண அரசுகளுக்கு ஓர் ஒப்பந்தம் போட்டன. காவிரி நீர் பங்கீடு தொடர்பான முதல் ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. அதாவது, மைசூர் மாகாணத்தில் அம்மாகாணம் சார்பாக ஓர் அணையும், சென்னை மாகாணம் சார்பாக ஓர் அணையும் கட்டிக்கொள்ளலாம் என்பது அது. அதுமட்டுமல்லாமல், இப்போதும் விவாதிக்கப்படும் மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று அடுத்த வரிகளில் வருகிறது. அதில், மேல்மட்டத்திலுள்ள மைசூர் மாகாண அரசு காவிரியில் எந்த அணை கட்ட முயன்றாலும், கீழ்மட்டத்தில் உள்ள சென்னை மாகாணத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல், மைசூர் மாகாணத்தின் பாசனப் பரப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கும் கீழ்மட்டத்தில் உள்ள சென்னை மாகாணத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த ஒப்பந்தம் அடுத்த 50 ஆண்டுகளுக்குச் செல்லும் என்றும், அதன்பிறகு இதனை பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலனை செய்துகொள்ளலாம் என்றும் அந்த ஒப்பந்தத்தில் இரு மாநில அரசுகளும் ஒருமனதாக கையொப்பமிட்டன. 

நீதிமன்ற உத்தரவுகளும், மதிக்காத கர்நாடகாவும்.!

பிரிட்டிஷ் காலனியாதிக்கம் விடைபெற்று, இந்தியா சுதந்திரம் அடைந்தது. மொழிவழி மாநிலங்கள் 1956ம் ஆண்டு பிரிக்கப்பட்டன. இதன்பிறகு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதும், அதனை மதிக்காமல் காவிரி நீரை கர்நாடகா தர மறுப்பதுமாக தொடர் கதையானது. தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பரப்பு பாதிக்கிற வகையில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது என்பது 1924 ஒப்பந்த விதி. இந்த 1924ஆம் ஆண்டிலிருந்து சட்ட விரோதமாக கர்நாடகா காவிரியின் குறுக்கே அணை கட்டிய காலம் வரையில் சராசரியாக தமிழ்நாட்டுக்குக் கிடைத்த தண்ணீரின் அளவு ஒரு ஆண்டுக்கு 360 டி.எம்.சி.யாக இருந்தது. 

மேலும் படிக்க | தமிழகத்திற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

ஆனால் 1970ஆம் ஆண்டில் கர்நாடகா காவிரியின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி அணைகளைக் கட்டியது. இதன்பிறகு தமிழ்நாட்டுக்கு கிடைத்த காவிரித் தண்ணீரின் டி.எம்.சியின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. வரவேண்டிய தண்ணீருக்காகவே தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 

மேகதாது (or) மேகேதாட்டு

கர்நாடக மாநிலத்தின் துணை ஆறுகளான கபிணி, ஹேமாவதி, ஹாரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி , சிம்சா, சொர்ணவதி ஆகியவை காவிரியுடன் இணைந்து பிரம்மாண்டமாக உருவெடுத்த பின்னர்தான் தமிழகத்துக்குள் பாய்கிறது. இதில், ராமனாகரா மாவட்டம் மேகதாது என்ற இடம் தமிழ்நாடு எல்லைப்பகுதிக்கு 10கி.மீ முன்னதாக இருக்கிறது. மேகதாது என்ற இடத்தில்தான், ஆழம் அதிகம் நிறைந்த நீரோடையாகவும், அதிக பாறை இடுக்குகளிலும் காவிரி புகுந்து வருகிறது. இவ்வளவு ஆழமான இந்த இடத்தில் பாறைகளைக் கொண்டு ஒரு ஆடு தாண்டிவிடும் என்கிறார்கள். அதனாலேயே, இந்த இடத்திற்கு கன்னடத்தில் ‘மேக்கேதாட்டூ’ என்றும், தமிழில் ‘ஆடு தாண்டும் பாறை’ அல்லது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

Image Of Cauvery River
மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இந்தப் பகுதியோடு கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி, தமிழகத்தில் காலடி எடுத்துவைத்து பில்லிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியாக விழுகிறது. இந்த மேகதாது இடத்தில்தான் தற்போது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்றுவருகிறது.

தமிழ்நாடு அரசின் தீர்மானம்

கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதித்தது. அப்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரைவயில் தனித் தீர்மானம் ஒன்றை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று கொண்டுவந்தார். இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதனால், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும் என்றார். மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 

கர்நாடக முதல்வர் கண்டனம்

தமிழக அரசின் தீர்மானத்துக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தமிழக சட்டசபையில்  நேற்று மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சட்டவிரோதமானது. இது ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமித்து கொள்ளும் வகையிலான மக்கள் விரோத தீர்மானமாகும். கூட்டாட்சி தத்துவத்தில் தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை இல்லாத தீர்மானம் இதுவாகும். இந்த தீர்மானத்தை கர்நாடக மக்கள் மற்றும் மாநில அரசு வன்மையாக கண்டிக்கிறது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது. மேகதாது திட்டம் கர்நாடகத்துக்கும், கர்நாடகத்தில் பிறக்கும் காவிரி ஆற்றுக்கும் சம்பந்தமானது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை கொடுத்தபிறகு உபரியாக உள்ள நீரை பயன்படுத்த கர்நாடகத்திற்கு உரிமை உள்ளது. தமிழ்நாட்டின் இந்த அரசியல் தீர்மானத்தை பற்றி கவலைப்படாமல் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு எல்லா ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்’ என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News