அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பொய் சொல்கிறார்: சஞ்சய் ரவுத் அதிரடி

அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பொய் சொல்கிறார். இது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. இந்த பிரச்சினையில் நாங்கள் பொய் சொல்லவில்லை என்று அமித் ஷா பெயரில் சத்தியம் செய்கிறோம்'' என்று சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2019, 01:25 PM IST
அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பொய் சொல்கிறார்: சஞ்சய் ரவுத் அதிரடி title=

மும்பை: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் இன்று (வியாழக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா பொய் பேசுவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதாவது மகாராஷ்டிராவில் ஆட்சியில் பங்கு என்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து அமித் ஷா (Amit Shah) பொய்களை கூறியுள்ளார் என்றும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு குறித்து சட்டசபை தேர்தலுக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சரை நோக்கி தனது தோட்டாக்களை பாய்ச்சிய சஞ்சய் ரவுத், "மகாராஷ்டிராவில் 2.5 ஆண்டுகள் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கையை குறித்து அமித் ஷா பொய் சொல்கிறார். இந்த விவகாரத்தில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மவுனம் காத்து வந்தனர் எனவும் கூறினார். 

அமித் ஷாவை மேலும் தாக்கி பேசிய சஞ்சய் ரவுத், பிரதமர் மோடி, மகாராஷ்டிராவில் நடந்த அனைத்து பொது பேரணிகளிலும், தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வருவார் என்று கூறினார். அதை ஒருபோதும் நாங்கள் மறுக்கவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடி, இன்று மிக உயர்ந்த அரசியல் தலைவர் இடத்தில் உள்ளார் என்பதால் அவர் சொன்னதை நாங்கள் மதித்தோம். அதேவேலையில், அனைத்து பொது பேரணிகளிலும், சிவசேனா தலைவரும் வாக்காளர்களிடம் அடுத்த முதலமைச்சர் தனது கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறினார். 

ஆனால் மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு மற்றும் சுழற்சி முதலமைச்சர் பதவியில் எந்த ஒப்பந்தமும் இல்லை என்று அமித் ஷா இப்போது எப்படிக் கூற முடியும்? சட்டமன்றத் தேர்தல் வரை இரு தரப்பினருக்கும் இடையிலான அனைத்தும் இயல்பாகவே இருந்தன. பின்னர் திடீரென்று விஷயங்கள் எவ்வாறு மோசமடைந்தன'' எனவும் கேள்வி எழுப்பினார்.

உத்தவ் மற்றும் அமித் ஷா இடையே அதிகாரப் பகிர்வு கலந்துரையாடல் சிவசேனா நிறுவனர் பாலா சாஹேப்பின் அறையில் நடந்தது என்று ரவுத் கூறினார். இந்துத்துவ சித்தாந்தத்தை முன்னெடுத்துச் சென்றதற்காக பாலா சாஹேப் பிரதமர் மோடியை ஆசீர்வதித்த அதே அறையில் தன் ஒப்பந்தம் நடந்தது.'' என்றார்.

இப்போது, அமித் ஷா இந்த பிரச்சினையில் பொய் சொல்கிறார். இது சிவசேனா நிறுவனர் மற்றும் எங்கள் கட்சிக்கு ஒரு அவமானமாக நாங்கள் பார்க்கிறோம். இந்த பிரச்சினையில் நாங்கள் பொய் சொல்லவில்லை என்று அவரது பெயரில் (அமித் ஷா) சத்தியம் செய்கிறோம்'' என்று ரவுத் மேலும் கூறினார்.

நேற்று பாஜக-சிவசேனா அதிகாரப் பகிர்வு குறித்து மவுனம் கலைத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் பேசினார். அப்பொழுது அவர், சிவசேனாவின் (Shiv Sena) சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் முதலமைச்சராக இருப்பார் என்று அனைவரின் முன்பு கூறியிருந்தார். அப்பொழுது அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிறகு சிவசேனா எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத புதிய கோரிக்கைகளை வைத்துள்ளன எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டு தான் முடிவு எடுத்திருக்கிறார். மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரும் விவகாரத்தில் எந்தவொரு முடிவும் அவசரத்தில் எடுக்கப்பட வில்லை. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 18 நாட்கள் நேரம் வழங்கப்பட்டது. சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அதன் பிறகு மாநிலத்தில் பெரும்பான்மையை நிருபிக்க அனைத்து கட்சிகளையும் ஆளுநர் அழைத்தார். ஆனால் எந்த கட்சியும் பெரும்பான்மையுடன் சென்று ஆட்சி அமைக்க கோரிக்கை வைக்க தவறியதால் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் பரிந்துரை செய்தார் எனக் கூறியிருந்தார்.

மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் உள்ளன. மற்ற இடங்களில் சிறிய கட்சி மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளன.

Trending News