Delhi New Chief Minister Atishi Marlena Latest Updates: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் (Delhi Liqour Scam Case), ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் (Aam Aadmi Party) சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் கடந்த செப். 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த 5 மாதங்களாக டெல்லி முதல்வர் பதவியில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்து வெளிவந்த உடனே தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவியை திரும்புவதாகவும் கூறியுள்ளார். அதாவது, மக்களின் ஆணைக்கிணங்க தான் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லி முதல்வராகும் அதிஷி
அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது முதல்வர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளதை அடுத்து, தற்போதைய கல்வி அமைச்சர் அதிஷி மர்லினா (Atishi Marlena) டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் (Aam Aadmi Party) சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின், அடுத்த கட்ட தலைவர்கள் வரிசையில் அதிஷியும் இருந்தார் என்பதால் இந்த தேர்வில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | பிரதமர் பதவி தருகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் என்னை அணுகினார்: நிதின் கட்கரி!
அதிஷி டெல்லியின் கல்வித்துறையை மட்டுமின்றி நிதித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்டவையின் அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அதிஷி மர்லினா குறித்து நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
யார் இந்த அதிஷி மர்லினா?
- ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அதிஷி (43) 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். அதற்கு முன்னர் டெல்லி அரசின் கல்வித்துறையில் ஆலோசகராக பணியாற்றினார். இவர் டெல்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
- இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். இவர் உதவித்தொகை மூலம் இங்கிலாந்தின் ஆக்ஸ்வோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியை பயின்றார்.
- சத்யேந்திர ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சட்டச்சிக்கல்கள் காரணமாக தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த பின்னர், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அப்போது இவருக்கு கல்வி, பொதுப்பணி துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலா துறைக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டன.
- அதிஷி டெல்லியின் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கல்வி ரீதியான மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றியவர் எனலாம். பள்ளிகளில் வசதிகளை அதிகமாக்கியது, கற்பித்தல் நடைமுறை தரமாக உயர்த்தியது ஆகியவற்றிலும் இவர் பங்காற்றினார். துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருந்தபோது, அவரின் ஆலோசகராக பணியாற்றிய நேரத்தில், 'தொழில் முனைவோர் மனப்பான்மைக்கான பாடத்திட்டம்' மற்றும் 'மகிழ்ச்சியான பாடத்திட்டம்' போன்ற பல முயற்சிகளை தொடங்கினார்.
- கல்வித்துறையில் இவரின் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, சுற்றுச்சூழல் பிரச்னைகளிலும் இவர் அதிக கவனம் செலுத்துபவர். டெல்லியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல முன்னெடுப்புகளை அதிஷி மேற்கொண்டிருக்கிறார்.
வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லிக்கு சட்டப்பேரவை தேர்தல் (Delhi Assembly Election 2025) நடைபெறும். எனவே, அதுவரை அதிஷி மர்லினாவே முதலமைச்சர் பதவியில் நீடிப்பார் எனலாம். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்ற சமயத்தில் ஆட்சியையும், கட்சியையும் பலம் குறையாமல் பார்த்துக்கொண்ட முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். அந்த வகையில், இன்று துணைநிலை ஆளுநரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடித்ததை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நிபா வைரஸால் இந்தாண்டில் 2வது பலி... பள்ளி, கல்லூரிகள் மூடல் - கட்டுபாடுகள் விதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ