‘இருந்தாலும் போயிட்டு வரேனு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்’ என்று அர்ஜூன் கண்ணாடியைப் பார்த்து ரிதம் படத்தில் பேசும் காட்சியை எவராலும் மறக்க முடியாதுதானே!. திரைமொழியில் இதுமாதிரியான பல மென் கவிதைகளைத் தந்த இயக்குநர் வஸந்த்துடன் ஒரு நேர்காணல்.!
தேவாவின் லைவ் கான்செர்ட் இளைஞர்களிடையே புதிய ‘வைப்’-ஐ உருவாக்கியிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின் இடையில் அவருடன் பணிபுரிந்த பல இயக்குநர்கள் தங்களது வாழ்த்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்துவருகின்றனர். இப்போதும் மனதை அள்ளும் பாடல்களைத் தந்த தேவா - வஸந்த் கூட்டணியில் உருவான பாடல்கள், அதன் பின்னால் உள்ள சுவாரஸ்யத் தகவல்களை இயக்குநர் வஸந்த் நம்மிடம் பகிர்கிறார். ஒரு ஜாலி வாக் போய்க்கொண்டிருந்தவரிடம் தேவாவைப் பற்றிப் பேச, குதூகலம் தொற்றிக்கொள்கிறது அவரிடம்.
வணக்கம். ‘தேவா’ என்றதும் உங்களுக்கு என்ன தோணுது ?
‘தேவா சார்னு சொன்னதுமே என் மனசுல வர முதல் வார்த்தை அவரோட பெரிய மனசு. எல்லோரையும் பாராட்டுற ஒரு குணம். எல்லோரிடமும் எளிமையாக பழகும் ஒரு பண்பு. ரொம்ப முக்கியமா சளைக்காம உழைக்கிறது.’
ஆசை படத்துல வர ‘புல்வெளி புல்வெளி’ பாடல் கம்போஸிங் நினைவுகளை ஷேர் பண்ணுங்களேன் ?
‘அந்த பாட்ட நாங்க கம்போஸ் பண்ணது மகாபலிபுரத்துல இருக்க ஐடியல் பீச்ல. ரெண்டு நாள் மூணு நாள் உட்கார்ந்து வேலை செஞ்சோம். நான் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடையமாட்டேன். இப்போ நடந்த பாராட்டு விழாவில்கூட தேவா சார் சொன்ன மாதிரி, ‘அப்போ கொஞ்சம் வேதனையா இருந்தது. ஆனா இப்போ அதுதான்ன் சாதனையா நிக்கிறது வசந்த் சார்கூட நான் வேலைப் பார்த்த பாடல்கள்னு சொல்லியிருக்காரு.
அவர் சொன்ன அந்த வேதனை என்னன்னா இன்னும் பெஸ்ட், இன்னும் பெஸ்ட்னு அவரோட பெஸ்ட்ட கேட்டு கேட்டு தேடிப்பிடிச்சு பண்ண பாட்டுதான் புல்வெளி புல்வெளி பாடல். அதுல இருக்க இன்னொரு அழகான விஷயம் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்தான். அவர்தான் அந்தப் பாட்டுக்கு வாசிக்கனும் நான் கேக்க, அவரும் எனக்காக வாசிச்சிக் கொடுத்தாரு.!.’
தேவா சார் நேத்து கான்செர்ட் வெச்சார். இது ரொம்ப லேட்டுனு நிறைய பேருக்கு தோணுது. உங்களுக்கு ?
‘தேவா சாரோட கான்செர்ட் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அவரோட பிறந்தநாளையொட்டி ப்ளாக் ஷீப் அத ரொம்ப பிரமாதமா நடத்துனாங்க. ரஜினி வந்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த கான்செர்ட்ட ‘லேட்’னு நீங்க சொன்னீங்கனா அதுக்கு என்னோட பதில் ‘Better late the ever’. இதுக்கு முன்னாடி அவர் கான்செர்ட் வெச்சிருக்காரானு எனக்குத் தெரியல. ஆனா நேத்து நடந்த கான்செர்ட் ரொம்ப நல்லா இருந்தது
‘அப்பு’ படத்துல ‘நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்’ பாடல் அட்டகாசமான மெலோடி. அது பற்றி கொஞ்சம் சொல்லுங்க
‘அந்த பாட்ட தென் ஆப்பிரிக்கா நாட்டுல டர்பன்ல பிரசாந்த் - தேவையானி வெச்சு எடுத்தேன். எங்க African Safari படம் எடுத்தாங்களோ அதே இடத்துல அந்தப் பாட்ட எடுத்தேன். அத பத்திலாம் விசாரிச்சுட்டுதான் அங்க போய் எடுத்தேன். அங்க ஓபன் சஃபாரி. நாம ஜீப்புக்குள்ள இருப்போம் ; மிருகங்கள் எல்லாம் வெளிய இருக்கும்.
அந்த வெட்டவெளிலதான் நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் பாட்டோட பல்லவியை எடுத்தன். முக்கியமா, ஒரு மெலோடி இதுவரைக்கும் யாரும் பார்க்காத பிரமாண்ட விஷுவலா இருக்கனும் ப்ளான் பண்ணிதான் ஷூட் பண்ணேன்.
அந்தப் பாட்டுக்கு வைரமுத்து அற்புதமான வரிகள் கொடுத்தாரு. பொதுவா தேவா சார்கிட்ட நான் ட்யூன் கேட்டுக்கிட்டே இருப்பேன். கிட்டத்தட்ட 20, 25 டியூன்கள் போட்ட பிறகுதான் ஓகே பண்ணுவேன்.
இத ஒரு தடவ தேவா சார் ஜாலியா, ‘நேரா 20ஆவது டியூன போட்றவா’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். அந்த மாதிரி ரசிச்சு ரசிச்சு உருவாக்குன மெலோடிதான் நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்.!’
‘50 ரூபாய்தான்’, ‘கொய்லா கொய்லா’ போன்ற க்ளாஸிக் பாடல்கள் பற்றியும் சொல்லுங்க. அந்த க்ளாசிக் எக்ஸ்ப்ரீயன்ஸ் அடுத்த தலைமுறைக்கும் சேரணுமில்லையா ?
’50 ரூபாய்தான் பாட்ட பொறுத்தவர தத்துவப் பாட்ட எப்படியாவது ஒரு டான்ஸ் மூட்ல வெக்க முடியுமானு ஆசைப்பட்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் மாதிரி ஒரு தத்துவ பாட்டு வேணும் ; அதுவும் டான்ஸ் மூட்ல வேணும்னு வைரமுத்து சார்கிட்ட கேட்டேன். அவரும் அவ்ளோ அழகா எழுதி, தேவா சாரும் அற்புதமா இசையமைச்சிருந்தாரு. எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு அது!’
ஆசை படத்தோட பின்னணி இசை எப்படி வாங்குனீங்க. தேவா அதுல போட்ட Effort பார்த்து உங்களுக்கு என்ன தோணுச்சு ?
‘ராஜா சார் ஸ்டைல்தான் தேவா சாருக்கும். 4 நாள் அப்படியே ரீல் ஓட்டி வொர்க் பண்ணக்கூடியவர். என்னோட ஐடியாவை சொல்வேன். நேருக்கு நேர், அப்பு, ஆசை எல்லாத்துக்கும் இப்படித்தான் ரீ ரெக்கார்டிங் உருவாச்சு.!’
தேவா சாருக்கு நீங்க Zee Tamil News மூலமா ஏதாவது ஒன்னு சொல்லணும்னா என்ன சொல்வீங்க ?
‘தேவா சாரோட இன்னொரு ஸ்பெஷல் குவாலிட்டி என்னன்னா ஒற்றுமை. பஞ்ச பாண்டவர் மாதிரி அவங்க ப்ரதர்ஸ் 5 பேரும் எப்பவும் ஒண்ணா இருப்பாங்க. இசைக் குடும்பம். இப்ப அவரு பையன் ஸ்ரீகாந்த் தேவா வரைக்கும். தேவா சார்கிட்ட சொல்ல எனக்கு ஒன்னு இருக்கு Keep Rocking Deva Sir...
பிறந்தநாள் வாழ்த்துகள் தேனிசைத் தென்றல் தேவா...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ