BLOODY SWEET 'TRISHA': தமிழ் சினிமாவின் 'குந்தவை'-யாக திரிஷா மாறிய கதை!

Actress Trisha 40th Birthday: 40 வயதிலும் 20 வயது பெண் போல 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2 கே கிட்ஸ்களை கவர்ந்துள்ளார் திரிஷா. அது தான் திரிஷா. இதே இளமையுடன் என்றும் அவர் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ வாழ்த்துக்கள்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : May 4, 2023, 05:46 PM IST
  • 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், திரிஷா.
  • அவரின் திரை வாழ்வில் ஜெஸ்ஸி, ஜானு ஆகிய இரு கதாபாத்திரங்கள் அதிக ரசிகர்களை கொண்டது.
  • இவர் பொன்னியின் செல்வனை அடுத்து தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
BLOODY SWEET 'TRISHA': தமிழ் சினிமாவின் 'குந்தவை'-யாக திரிஷா மாறிய கதை! title=

Actress Trisha 40th Birthday: நடிகை திரிஷா இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பொதுவாக நாயகிகளின் வயதை சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் 40 வயதிலும் நாயகியாக நடித்து பல இளம் நாயகிகளுக்கு சவாலாக இருக்கும் திரிஷாவின் வயதை சொல்வது தான் அவருக்கு பெறுமை. சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் திரிஷா பார்க்கலாம்.

அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. அந்தப் படம், டிசம்பர் 13, 2002 அன்று வெளியானது. திரையுலகில் த்ரிஷா கடந்த ஆண்டு 20 வருடங்களை நிறைவு செய்தார்.  1999இல் பிரசாந்த், சிம்ரன் நடித்த 'ஜோடி' படத்தில் சிறிய ரோலில் த்ரிஷா நடித்திருந்தாலும், அவர் நாயகியாக அறிமுகமானது "மெளனம் பேசியதே" படத்தில் தான். 

என்றென்றும் கனவு கன்னி!

அந்த படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிகை திரிஷா நடித்தார். உனக்கு 20 எனக்கு 18, லேசா லேசா, கில்லி, சாமி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்தினார். வர்ஷம் என்னும் படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்தப்படம் தான் தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையானார். இவர் கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்

தெலுங்கிலும் நம்பர் 1 இடத்தில் பல ஆண்டுகள் நீடித்தார். அங்குள்ள முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, வெங்கடேஷ், ராணா, பிரபாஸ் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து மிரள வைத்தார். இப்போது இவர் நடிப்பில் லியோ, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2,  த ரோட் என அடுத்தடுத்து படங்கள் தயாராகி ரிலீசுக்கு ரவுண்டு கட்டி காத்திருக்கின்றன.  இவர் நடிப்பில் வெளியான "பொன்னியின் செல்வன்" முதல் மற்றும் இரண்டாம் பாகம் என்றுமே தென்னிந்திய குயின் திரிஷா தான் என்பதை நிரூபித்துள்ளது. 

நாற்பதில் நாயகி...

எப்போதுமே இவருக்கு வயதாகிவிட்டதாகவும், 40 வயதை நெருங்கிவிட்டதாகவும் விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு அந்தப் பார்வை மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா என இளம் நடிகைகளுடன் நடித்தாலும், அவர்கள் அனைவரையும் ஓவர் டேக் செய்து ரசிகர்களின் கவனத்தை அதிகம் பெற்றார் த்ரிஷா. இதையெல்லாம் தாண்டி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனான காட்சிகளில் கூட மிகவும் நேர்த்தியாக நடித்து அசத்திவிட்டார்.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அனைத்து கதாநாயகன்களுடனும் நடித்துவிட்டார். ஹீரோயின்களின் மார்க்கெட் ஒருசில ஆண்டுகள் தான் என்ற பேச்சுகளை எல்லாம் கிளீன் போல்ட் ஆக்கிவிட்டு 20 ஆண்டுகள் கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். எத்தனை முன்னணி நடிகைகள் அவ்வப்போது வந்து சென்றாலும், சத்தமே இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஒருசில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தாலும், மார்க்கெட் இல்லாமல் இவர் இருந்ததில்லை. 

ஜெஸ்ஸி... ஜானு...

கில்லி, சாமி, விண்ணைத்தாடி வருவாயா, 96 போன்ற படங்களில் இவரின் ரோல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதோடு அரசியலை மையமாக கொண்டு வெளியான கொடி படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்து மிரட்டி இருப்பார். இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றாலும் மிகவும் இஷ்டம். இன்றளவும் ட்விட்டரில் அவரிடம் விருது வாங்கிய புகைப்படத்தை தான் thumbnail ஆக வைத்துள்ளார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இவருக்கு இருப்பதாகவும் சில அரசியல் கிசுகிசுக்கள் கிளம்பின. 

பொன்னியின் செல்வனை அடுத்து தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் வெளியானால் திரிஷாவில் சினிமா வாழ்க்கை இன்னும் அடுத்த கட்டம் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 20 ஆண்டுகளாக ஒரே எடையுடன் இருப்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல என்பது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தெரியும். இப்படி 40 வயதிலும் 20 வயது பெண் போல 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2 கே கிட்ஸ்களை கவர்ந்துள்ளார் திரிஷா. அது தான் திரிஷா. இதே இளமையுடன் என்றும் அவர் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ வாழ்த்துக்கள். 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது குந்தவையாக நடித்தது யார் தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News