இனிமேல் ரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன் - சந்தோஷ் நாராயணன்!

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின் நடித்துள்ள சூது கவ்வும் 2 படம் இந்த மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 

Written by - RK Spark | Last Updated : Dec 5, 2024, 03:51 PM IST
    மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2'.
    சென்னையில் படத்தின் முன்னோட்டம் நடைபெற்றது.
    வரும் 13ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இனிமேல் ரஞ்சித் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன் - சந்தோஷ் நாராயணன்! title=

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது. 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இம்மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ஆர். ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

மேலும் படிக்க | டிசம்பர் மாதம் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்! ஒரு மாதத்தில் இத்தனையா? முழு லிஸ்ட்..

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ''தயாரிப்பாளர்கள் சி.வி.‌குமார் மற்றும் தங்கராஜ் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் ரசிக்கும் படி சுவாரசியமாக இருக்கின்றன. நிச்சயமாக இந்த திரைப்படம் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.  சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும்போது மிர்ச்சி சிவாவும் அதில் நடித்திருந்தார். அவருடைய திறமை இன்னும் வெளிப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன். நல்லதொரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வெல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.‌ 

தயாரிப்பாளர் சி வி குமாரிடம் வாய்ப்பு பெற்றது தனி கதை. நானும் என்னுடைய நண்பரும் இணைந்து எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதன் மூலமாக வாய்ப்பினை பெற்றோம். அது மறக்க இயலாத நிகழ்வு.  பின்னர் நான் சந்தோஷ் நாராயணனை சந்தித்தேன். அவருடைய இசையில் உருவான பாடல்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேறு மாதிரியான இசை வேண்டும் என்று கேட்டேன். அவர் அதற்கும் தயாராக இருந்தார். இன்று அவர் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். இன்று புதிய சினிமா உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்கு அவர்தான் முதல் தேர்வு. அவருடைய திறமையை கண்டெடுத்த சி வி குமாருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ சூது கவ்வும் 2 படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தர வேண்டும் என வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி, நன்றி,'' என்றார். 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ''பா ரஞ்சித் மின்னஞ்சல் அனுப்பி தயாரிப்பாளர் சி வி குமாரை கவர்ந்தார். நான் அவருக்கு ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி வாய்ப்பினை பெற்றேன். நானும் நலன் குமாரசாமியும் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட பிறகு திரைப்படங்களை உருவாக்குவதற்காக தயாரிப்பாளர்களை அணுகத் தொடங்கினோம். தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் ஸ்டைல் எனக்கு என் மீது இருந்த தன்னம்பிக்கையை குறைத்து விட்டது. கதை சொல்லும் விதம் எனக்கு பிடிபடவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி அவர்களை சம்மதிக்க வைப்பதெல்லாம் முடியாது. அதனால் நமக்கெல்லாம் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று நம்பினேன்.  

அந்த தருணத்தில் தான் அட்டகத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தயாரிப்பாளர் மதுரையிலிருந்து வருகை தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரை ஃபேஸ்புக்கில் பின் தொடர்ந்தேன். ஒரு நாள் அவருடைய சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து கதையை கேட்டார்.‌ அவரை சந்தித்த உடன் நான் சொன்ன முதல் வார்த்தை எனக்கு கதை சொல்ல வராது என்றேன், அவர் பரவாயில்லை திரைக்கதையை கொடுங்கள் என்றார். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் கதையை வாசித்து விட்டு படம் தயாரிக்கலாம் என்றார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேடையில் தற்போது நின்றிருக்கும் அனைத்து திறமைசாலிகளையும் உருவாக்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ''இயக்குநர்கள் பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இதுவரை எந்த நிகழ்வுக்கும் ஒன்றாக வந்ததில்லை என நினைக்கிறேன். இங்கு அவர்கள் ஒன்றாக வந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அட்டகத்தி படத்திற்கு முன்பு என்னை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரிடத்திலும் அறிமுகப்படுத்தி திறமையான இசை கலைஞர் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டவர் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா.‌ நான் எப்போதெல்லாம் சோர்ந்து  போகிறேனோ அப்போதெல்லாம் உற்சாகப்படுத்துபவர் மிர்ச்சி சிவா தான். மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் தான் நான் இசையமைக்க வேண்டிய முதல் திரைப்படமாக இருக்க வேண்டியது.‌ அந்தப் படத்தின் இசை வேறு வடிவமாக இருக்கும் நீ வேண்டாம் என்று நாசுக்காக மறுத்தவர் மிர்ச்சி சிவா.

அதன் பிறகு சி.வி.‌குமார் என்னை ஒருநாள் சந்தித்தார். என்னுடைய இசை எல்லாம் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது, ஒரு மூன்று மாதம் காத்திருங்கள் என்றார். சொன்னது போல் மூன்று மாதம் கழித்து வந்தார், பா. ரஞ்சித்தை அறிமுகப்படுத்தினார்.‌ அவருக்கு என்னுடைய இசை பிடிக்கவில்லை. இந்த மக்களை பார் என்று அழைத்துச் சென்று காண்பித்தார். அதன் பிறகு ஃபோக் மியூசிக்கை பற்றி தெரிந்து கொண்டேன்.‌ உண்மையை சொல்லப் போனால் என்னை ஒரு கலைஞராக மாற்றியது பா. ரஞ்சித் தான். எனக்கு கிடைத்த முதல் மூன்று படங்கள் என்னை அடையாளப்படுத்தியவை. இதற்காக இந்த மூன்று இயக்குநர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைக்கும் போது உணர்வுப்பூர்வமாக இருந்தது. அது மறக்க முடியாத அனுபவம். இந்த மூன்று இயக்குநர்களிடம் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். 

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ''தயாரிப்பாளர் சி வி குமாரும், இயக்குநர் அர்ஜுனும் என்னை சந்தித்தனர். சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றனர். இந்தப் படத்திற்கு நலன் குமாரசாமி ஒரு அவுட்லைனை சொல்லி இருக்கிறார், அதனை நாங்கள் விரிவுபடுத்தி இருக்கிறோம் என இயக்குநர் அர்ஜுன் முழு கதையையும் சொன்னார், நன்றாக இருந்தது. தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் சினிமாவின் சொத்து. அவர் ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் வசதி இல்லை என்றாலும் திறமையான மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். இன்னும் நிறைய புதுமுக திறமைசாலிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து அவர் படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.

மேலும் படிக்க | அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News