நிர்ஜல ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்களுக்குச் சகல பாவங்களும் நீங்கி புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வரும். வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். அதில், வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என சிறப்பை பெறுகிறது. பீமன் அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் பீம விரதம் என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
வைகாசி மாதம் சுக்ல ஏகாதசி திதி ஜூன் 17, 2024 அன்று அதிகாலை 4:45 மணிக்கு தொடங்கி ஜூன் 18 அன்று காலை 6:20 மணிக்கு முடிவடைகிறது. ஏகாதசி விரதம், உதயதிதியின்படி, ஜூன் 18 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஏகாதசி நாளில் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுசரிக்கப்படுகிறது. நிர்ஜலா ஏகாதசி விரதம் மகாபாரதக் கதையில் வியாஸால் விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், அந்த நபர் 24 ஏகாதசிகளுக்கு விரதம் இருந்த பலன்களைப் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. அதன் பெயரிலிருந்து தெளிவாகத் தெரிகிறது, இந்த நாளில் தண்ணீர் கூட அருந்தக் கூடாது. எனவே இது மிகவும் கடினமான விரதமாக கருதப்படுகிறது. .
நிர்ஜல ஏகாதசி நாளில் வழிபடும் முறை
நிர்ஜலா ஏகாதசி அனைத்து 24 ஏகாதசிகளிலும் மிகவும் கடினமான விரதமாக கருதப்படுகிறது, இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்துவதில்லை. ஆனால் உடல் நலன் ஒத்துழைககது என்றால், விரதம் இருப்பவர் தண்ணீருடன் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்நாளில், அதிகாலையில் எழுந்து குளித்து, சுத்தமான ஆடை அணிந்து, விரதம் இருங்கள். விரத நாளில் கோவிலை சுத்தம் செய்து, விஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. விஷ்ணுவுக்கு பழங்கள், பூக்கள் அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றவும். பின்னர் துளசி செடியை வணங்கி நெய் தீபம் ஏற்றவும்.
துளசி செடியை 5 அல்லது 7 முறை சுற்றி வந்து ஆரத்தி செய்வது சிறப்பு. இதற்குப் பிறகு, நாள் முழுவதும் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். நிர்ஜலா ஏகாதசி விரதத்தின் போது இரவில் தூங்கக்கூடாது. மாறாக, இரவில் விஷ்ணுவை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும், முடிந்தால் பஜனையும் கீர்த்தனையும் செய்ய வேண்டும். இந்த விரதம் மறுநாள் முடிக்க வேண்டும். எனவே மறுநாள் அதாவது ஜூன் 19ஆம் தேதி காலை பிரம்ம முஹூர்த்தத்தில் குளித்தல் முதலியவற்றை செய்து வழிபட்ட பின் உண்ண வேண்டும். அப்போதுதான் இந்த விரதம் முழுமையடைந்ததாகக் கருதப்படுகிறது.
நிர்ஜல ஏகாதசி தினத்தில் தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள் என்கின்றன சாஸ்திரங்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் தண்ணீர் தானமாக கொடுக்க முடியாவிட்டாலும் பகவான் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்து ஒரு பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.