இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு டெஸ்ட் தொடரை விளையாட திட்டமிட்டால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன் நின்று நடத்துவதாக தெரிவித்துள்ளது, ஆனால் இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான மார்ட்டின் டார்லோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மைதானமாக இங்கிலாந்தின் மைதானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் வருமானத்திற்காக இந்த திட்டத்தை முன் எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பிசிசிஐ அடுத்த சில வருடங்களுக்கு இது சாத்தியம் இல்லை என்று மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகிறது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!
"முதலில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய-பாகிஸ்தான் தொடர் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேசியது. எப்படியிருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் என்பது BCCI முடிவெடுக்கும் ஒன்று அல்ல, அது இந்திய அரசாங்கத்தின் முடிவு. இப்போதைய நிலைப்பாடுபடி, ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடுவோம்" என்று இந்தியாவின் நிலைப்பாட்டை இங்கிலாந்திற்கு கூறியதாக மூத்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2012 இல் இந்தியாவில் ஒருநாள் தொடரில் விளையாடியது மற்றும் கடைசியாக 2007ல் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு நாடுகளுக்கிடையேயான பதட்டமான அரசியல் சூழ்நிலையால் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றால், அதன் மூலம் பெரும் வருமானம் வரும் என்பதால் இந்த போட்டிகளை நடத்த இங்கிலாந்து முன் வந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றால் அது வருமான ரீதியாக அதிகம் லாபம் பெற முடியும். இந்தியாவை போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்திற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பிறகு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யாத நிலையில், தற்போது மீண்டும் அணிகள் பாகிஸ்தானிக்கு வர தொடங்கி உள்ளன. இதனால் நடுநிலையான மைதானத்தில் விளையாட நேர்ந்தால் அது அவர்களின் பார்வையில் ஒரு பிற்போக்கு நடவடிக்கையாக இருக்கும் என்று மறுத்துள்ளது.
மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!