கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 2019 வருடம் ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் நடக்க உள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் தொடர் மே மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் அடுத்த வரும் மே மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால், ஐபிஎல் 12 சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) கோவாவில் நடைபெற உள்ளது.
அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை வைத்துள்ளது. அதில் மூன்று பேரை மட்டும் விடுவித்துள்ளது. மற்ற 22 பேரை தக்கவைத்துக் கொண்டது. அந்த மூன்று பேர் மார்க் வூட்(இங்கிலாந்து), கனிஷ்க் சேத்(இந்தியா), ஹிதிஸ் சர்மா(இந்தியா) ஆவார்கள். இதில் கடந்த சீசனில் மார்க் வூட் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். கனிஷ்க் சேத் மற்றும் ஹிதிஸ் சர்மா இருவரும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசன் 11-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இதுவரை ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.