IPL 2020 தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
IPL 2020 தொடரின் 32-வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக திரிபதி மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி மும்பை அணி பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.
திரிபதி 7 ரன்களிலும், ராணா 5 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிர்பார்த்த அளவிற்க்கு விளையாடவில்லை. அதிகம் எதிர்பார்த்த ரஷலும் 12 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டனார்.
ALSO READ | IPL 2020: KKR Captain பதவியிலிருந்து விலகினார் Dinesh Karthik, புதிய கேப்டனானார் Eoin Morgan
கொல்கத்தா அணியின் கேப்டன் மார்கன் மற்றும் கம்மின்ஸ் இறுதி ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி-காக் அதிரடியாக விளையாடினர். டி-காக் கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் கடந்தார். மும்பை 94 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனால், டி-காக் தனது அதிரடியை தொடர்ந்ததால் மும்பை அணி எளிதாக வெற்றி பாதைக்கு சென்றது. இறுதியாக மும்பை அணி 16.5 ஒவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி-காக் 44 பந்துகளில் 78 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.