தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக RSS சிந்தனையாளரை நியமிப்பதா என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்ய நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு துணைவேந்தர் பொறுப்புக்கு விண்ணப்பித்த 17 பேரில், பேராசிரியர்கள் வின்சென்ட் காமராஜ், டேவிட் அம்புரோஸ், பாலு, ரகுநாதரெட்டி, கோபால் மற்றும் சூர்ய நாராயண சாஸ்திரி ஆகிய ஆறு பேரை தேர்வு செய்தது.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கடைசி மூவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முதல் மூன்று பேரை மட்டும் பல்கலைக் கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் அவர்களுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியது.
ஆனால், தேர்வுக்குழு பரிந்துரையில் இடம் பெறாத சூர்ய நாராயண சாஸ்திரி அவர்களை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமித்து ஆணை பிறப்பித்துள்ளார் ஆளுநர் புரோகித்.
அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனம் -ஸ்டாலின் கண்டனம்
சூர்ய நாராயண சாஸ்திரி, சம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 வரை துறைத் தலைவராக இருந்தபோது பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர். தமிழ்மொழியை நீச பாஷை என்றும், சமஸ்கிருதத்தை தெய்வீக மொழி என்றும் பேசியதால் திமுக அரசால் கடும் கண்டனத்துக்கு ஆளாகி, 2009 இல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர ஈடுபாடு கொண்டது மட்டுமின்றி, இந்துத்துவா சிந்தனையாளர் குழாமில் இடம் பெற்றவர் என்பதும், தான் எழுதிய நூலை பிரதமரின் யோகா குரு, பேராசிரியர் நாகேந்திராவை அழைத்து வெளியீட்டு விழாவை நடத்தியவர் என்பதும் துணைவேந்தருக்கான தகுதிகளாக ஆகி இருக்கிறது.
மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் பல துறைகளில் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு திணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்களை நிராகரித்துவிட்டு, மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே சட்டப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் சூர்யநாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்து இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பொறுப்பை ஏற்றதிலிருந்து இந்துத்துவா, சங் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் இரண்டாவது தலைமைச் செயலகமாக ராஜ்பவனை மாற்றி, அரசியல் சட்ட மரபுகளை மீறி அதிகார ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் ஒருவரை தேர்வு செய்யாமல், விதிமுறைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கி செயல்படுகின்ற சூர்யநாராயண சாஸ்திரியை நியமனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
அம்பேத்கர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் பா.ஜ.க.வின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்று இருக்கிறார். மத்திய பா.ஜ.க., அரசிடம் தாள்பணிந்து கிடக்கும் அதிமுக அரசு, இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இணங்கிச் சென்று ஆளுநரின் நியமனத்தை ஏற்பது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் ஆகும்.
எனவே ஆளுநர் அறிவித்துள்ள துணைவேந்தர் நியமனத்தை ரத்துவிட்டு, தேர்வுக்குழு பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக பேராசிரியர்கள் மூன்று பேரில் ஒருவரை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.