மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அடுத்து மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னை கொடுங்கையூரில் சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை, அந்த வழியாக சென்ற சிறுமிகள் மிதித்ததால் இருவரையும் மின்சாரம் தாக்கியது. அவர்களை உடனடியாக சிறுமிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.