கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சில
தினங்களுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் சீராக முன்னேற்றம் பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை பார்க்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ப.சிதம்பரம் மற்றும் இன்னும் சில தலைவர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்து உடல் நலம் விசாரித்தார். தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் விசாரித்து வருகிறார்கள்.
இன்று மதியம் அதிமுக சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தனர். கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.