சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சசிகலா.
ஜெயலலிதா மரணமடைந்து முப்பது நாட்கள் வரையில் அமைதியாக இருப்பேன் எனத் தெரிவித்திருந்த பி.ஹெச்.பாண்டியன், 30 நாட்கள் முடிந்ததும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து சசிகலா தரப்பில் பி.எச்.பாண்டியனுடன் சமரசப் பேச்சு நடந்து வருகிறது. சசிகலா முதல்வர் பதவியை நோக்கி நகர்த்திவரும் இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை 11 மணிக்கு சென்னையிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பி.ஹெச்.பாண்டியன்.
பி.ஹெச்.பாண்டியன் கூறுகையில்:-
"என்போன்ற மூத்த வழக்கறிஞர்கள் யாருமே நோயாளி மருத்துவமனைக்கு போகும் முன்பு என்ன நடந்திருக்கும் என்று யோசிப்போம். ஜெயலலிதா வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்து மன அழுத்தத்தால் கீழே விழுந்துள்ளார். இந்த தகவல் மறுநாள் பத்திரிகைகளில் வந்தது. ஆனால் பேட்டியளித்தவர்களோ அம்மாவுக்கு ஒன்றுமே இல்லை என்றார்கள்.
நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். 2-வது மாடியில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு அந்த தளத்தில் அதே வரிசையில் டாக்டர்களுக்கு என்று ஒரு அறை இருந்தது. அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு டாக்டர்களிடம் விவரம் கேட்க முனைந்தேன். விவரம் சொல்ல யாருமே இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் மெய்க் காப்பாளர்கள், அம்மா நலமாக இருக்கிறார், சீக்கிரம் வருவார் என்று கூறினர்.
பல நாட்கள் நானும் அப்பல்லோ சென்றேன். அங்கே அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அமர்ந்து செய்திகளை பற்றி விவாதிப்போம். ஆனால் எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் சொல்லப்படவில்லை என்றார் பி.ஹெச்.பாண்டியன்.