சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து முஸ்லீம் இணைந்து கொண்டாடும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பண்டிகையை இப்பகுதி மக்கள் அல்லாசாமி பண்டிகை என்றும் பூக்குழி திருவிழா என்றும் பல்வேறு பெயர்களில் அழைத்து, 10 நாட்கள் விழாவாக கொண்டாடி வருகின்றனர். சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதியில் இந்த விழாவை நடத்தி வருகின்றனர். 17 ம் நூற்றாண்டில் இருந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இந்த திருவிழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்துக்களின் கலாச்சாரமும், இஸ்லாமியர்களின் கலாச்சாரம் இணைந்து ஒரு விழா கொண்டாடப்படுவது இங்கு மட்டும்தான்.
மக்களின் நல்வாழ்வுக்காகவும், மத ஒற்றுமை உலகறிய செய்யும் வண்ணமும் உலக மக்களின் வளமான வாழ்வுக்காகவும் இவ்விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. வஞ்சினிபட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையதுமுகைதீன் குடும்பத்தினா் இந்த திருவிழாவை கிராமத்தினரோடு இணைந்து நடத்தி வருகின்றனா். இருப்பினும் 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு சையதுமுகைதீன் குடும்பத்தினர் வெளியூர் சென்றதால் இத்திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. பின்பு கிராமத்தினர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சையதுமுகைதீன் குடும்பத்தினரை தேடி கண்டுபிடித்து அவரது மகன் சையதுமொய்நுதீன் மற்றும் அவரது சகோதரா்களை அழைத்து வந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதநல்லிணக்கத்தோடு இவ்விழா மீண்டும் நடத்தியுள்ளனர்.
இந்த திருவிழாவையொட்டி ஊர் முழுவதும் வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீதி முழுவதும் டியூப் லைட் கட்டப்பட்டிருந்தது. ஊர் முழுவதும் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என அனைவரும் விருந்து வைத்து அசத்தினர். மாலை பூக்குழி வளா்க்கப்பட்டு சுவாமிக்கு பாத்தியா ஒதப்பட்டது. உள்ளூா் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமத்தைச் சோ்ந்தவா்களும் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து அல்லாவிடம் பாத்தியா ஒதி வழிபாடு நடத்தினர். கிராம மக்கள் இரு கைகளை குவித்து அல்லாவை வணங்கி வந்தனர். பின்பு பக்தர்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியர்கள் பூசி விடும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்பு கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த தொழுகை நடத்தப்பட்டது.
அதனையடுத்து மாலை 3 மணிக்கு கூடத்திலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று ஊர் முழுவதும் கிராம மக்களோடு வலம் வந்தனர். பின்பு அக்கிராமத்தில் அமைக்கப்பட்ட மிகப்பிரமாண்டமான பூக்குழியை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பிறகு பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்கினர். அப்போது பூக்குழிக்குள் இருந்த நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனர். அதன்பிறகு மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை தங்களது முந்தானையில் பெண்கள் வாங்கிச் சென்றனர். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டு திருவிழா நிறைவு பெறும். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த விழா பல தலைமுறையினா்களால் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | விமர்சனங்களை எதிர்கொள்ள நான் எப்போதும் தயங்கியதில்லை -முதல்வர் ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ